Sunday, May 19, 2013

போலச்செய்தல்...



     இன்றைய யுவன்,யுவதிகளில் பெரும்பாலானோர் ஜீன்ஸ் பேண்டை அணிந்துகொண்டு நடப்பதை பெருநகரங்களில் சர்வசாதாரணமாக காணமுடிகிறது.(கிராமங்களும் இதற்கு விதிவிலக்கல்ல). அதுவும் இந்த மே மாத கடுமையான வெயிலிலும் ஜீன்ஸ் அணிவது கொடுமையிலும் கொடுமை. நமது நாடு (மித) வெப்ப மண்டல நாடு. இங்கு பெரும்பாலும் ஆறுமாதங்களாவது கடுமையான வெப்பம் நிலவுகிறது. மேமாத வெய்யிலைப் பற்றி சொல்லவே தேவையில்லை. இச்சூழ்நிலைக்கு ஏற்றது கதர் போன்ற வெப்பம் தாக்காத அல்லது வெப்பத்தை தாங்கக்கூடிய ஆடைதானே தவிர ஜீன்ஸ் அல்ல. வெப்ப நாட்களில் ஜீன்ஸ் அணிவதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை அவர்கள் உணராமல் இருக்கமுடியாது. அப்படியிருந்தும் ஏன் எதையும் சுய உணர்வுடன் சிந்தித்து செய்லபடாமல் ஆங்கிலேயர்களைப்பார்த்து போலச் செய்கிறார்கள் என்றுதான் புரியவில்லை?

   நம் உடலுக்கு எது ஏற்றது? எது சிறந்தது? என்ற சுய அறிவுகூட இவர்களுக்கு இல்லையே என்பதை நினைக்கும்போது வேதனைதான் மிஞ்சுகிறது. இதில் பெரும்பாலானோர் மெத்தப்படித்தவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் வேதனையிலும் வேதனை. எல்லோரும் ஆங்கிலேயர்களின் மோகத்தில் மூழ்கி இருக்கிறார்கள். ஆனால் ஆங்கிலேயர்கள் உடைவிஷ்யத்தில் மிகத்தெளிவாகவே இருக்கிறார்கள். வெப்ப நாட்களில் மென்மையான ஆடைகளையும், குளிர் நாட்களில் அதற்கேற்ற உடைகளையும் என்று பகுத்துணர்ந்து அணிகிறார்கள். ஆனால் நாம் அவர்கள் எதை செய்கிறார்களோ அதை அப்படியே கண்ணைமூடிக்கொண்டு காப்பியடித்து நாம் செய்வது சரியா,தவறா என்றுகூட சிந்திக்காமல் போலச்செய்து கொண்டிருக்கிறோம்.

   நான் தமிழர் பாரம்பரியப்படி வேட்டி அணியுங்கள், புடவையை உடுத்துங்கள் என்று கூறவில்லை. (அப்படி வேட்டி,புடவை அணிவதில் எந்த தவறும் இல்லை என்பது வேறுவிஷயம்). அதோடுமில்லாமல் நான் ஜீன்ஸ் பேண்ட்க்கு எதிரானவளும் அல்ல. இன்னும் சொல்லப்போனால் நானும் என்னவனும் ஜீன்ஸ் பேண்ட்,டி-சர்ட் அணிபவர்கள்தான். ஆனால் கண்டிப்பாக இதுபோன்ற கோடை நாட்களில் அணியாமல் குளிர் மற்றும் மழைக்காலங்களில் மட்டுமே அணிவோம்.

    உடை விஷயத்தில்தான் இப்படியென்றால் உணவு விஷயத்தில் இன்னும் மோசம். இப்படி ஒவ்வொன்றிலும் மேலை நாட்டினரைப்பார்த்து போலச்செய்துகொண்டிருந்தால் நம் பாரம்பரியங்களை மட்டுமல்ல சுயத்தையும் இழந்து மலடாகி நிற்போம் என்பதே உண்மை.

2 comments:

  1. நன்றாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். வாரம் ஒருமுறையாவது. தமிழுக்கு நல்ல எழுத்தாளர்கள் இன்னும் அதிகம் தேவை. –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி ஐயா...

      Delete