Tuesday, October 30, 2012

தொடர்: நான் படித்த நன்னூல்!






       வாரத்தில் இரண்டு,மூன்று புத்தகங்களையாவது நான் வாசித்து விடுவேன்.நான் வாசித்த புத்தகங்களை ’’நான் படித்த நல்ல நூல்’’ என்னும் தலைப்பில் வாரம் ஒருமுறை உங்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.என் குழந்தைப் பருவம் தொட்டு புத்தகங்கள் எனக்கு நல்ல வழிகாட்டியாக வந்துகொண்டிருக்கிறது.என் குடும்பத்தில் என் அம்மாவுக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளது.அதன் காரணமாகக் கூட எனக்கு புத்தகங்களின் மீது ஈர்ப்பு ஏற்ப்ட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்.நான் மனிதர்களை எந்தளவுக்கு நேசிக்கிறேனோ அந்த அளவிற்கு புத்தகங்களையும் நேசிக்கக் கூடியவள்.உங்களுக்குத் தெரியும் தமிழில் புத்தகத்திற்கு ’நூல்’ என்றொரு பெயர் உண்டு.அதற்கு என்ன பொருள் தெரியுமா? இதற்கு தமிழருவிமணியன் ஐயா அவர்களின் விளக்கத்தை கேளுங்கள்: நீங்கள் வீடு கட்டுகிறீர்கள் என்றால் அந்த வீட்டிற்கு கதவு,ஜன்னல் பொருத்த தச்சரை நாடுவீர்கள்.அந்த தச்சர் கதவை சரியான நிலைக்கு கொண்டுவரவும் அதன் முண்டுகளையும் தேவை இல்லாத வற்றையும் நீக்க நூலை வைத்துத்தான் சரிசெய்வார்.அதுபோலதான் நண்பர்களே, நம் மன அழுக்குகளை அகற்றி பண்பட்ட மனிதர்களாக உருவாக நூலை வைத்துதான் சரி செய்ய முடியும்.ஆகையால் தான் புத்தகத்திற்கு நூல் என்று தமிழில் பெயருண்டு.இது போல் தமிழைத் தவிர வேறெந்த மொழிகளிலும் புத்தகத்திற்கு நூல் என்று சரியான பொருள் இருப்பதாக நான் அறிந்த வரையில் இல்லை.அதுதான் தமிழின் சிறப்பு.

    இவ்வளவு சிறப்பு வாய்ந்த புத்தகங்ளை நான் வாசித்த நல்ல புத்தகங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.அவசியம் நீங்கள் இந்த புத்தகங்களை வாசிக்கலாம்.சரி இந்த வாரத்திற்கான புத்தகத்திற்கு வருவோம்.

      என கல்லூரி காலத்தில்தான் திரு.இறையன்பு I.A.S அவர்கள் தொலைக்காட்சியின் வாயிலாக எனக்கு அறிமுகமானார்.அவருடைய நேர்மையும்,எளிமையும்தான் என்னை மிகவும் கவர்ந்தன.பிறகு அவரின் ’ஆத்தங்கரையோரம்’ என்னும் புத்தகத்தை வாசித்தேன்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்பொழுதுதான் அவருடைய ’உன்னோடு ஒரு நிமிஷம்’ என்னும் குழந்தைகளுக்கான புத்தகத்தைப் படித்தேன்.இந்த புத்தகம்‘சுட்டி விகடன்’ இதழில் ஒரு பக்கத்திற்கு ஒவ்வொரு இதழிலும் எழுதப்பட்ட கட்டுரைகளாகும்.இன்றைய குழந்தைகளுடைய வாழ்க்கையில் தென்படாத சில கூறுகளை நம்முடைய வாழ்க்கையிலிருந்து தொடங்கி பகிர்ந்து கொள்வது போல் எழுதப்பட்ட நூல்.அழகான படங்களோடு வெளிவந்த நூல்.

   நான் சுட்டி விகடனில் தொடராக வாசித்தபோதே முடிவு செய்துவிட்டேன்.இது புத்தகமாக வந்தப் பிறகு அவசியம் வாங்கியாக வேண்டும் என்று.இது குழந்தைகளுக்கானப் புத்தகம் என்றாலும் தம் பிள்ளைகளின் எதிகாலம் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு பெற்றோரும் அவசியம் வாசிக்க வேண்டும்.தம் குழந்தைகளை அதிகம் மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்று முயற்சி செய்கிறோமே ஒழிய நல்ல பண்புள்ளவர்களாக வரவேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை.ஆனால் திரு.இறையன்பு அவர்கள் இந்த புத்தகத்தின் மூலம் குழந்தைகளின் சின்னச்சின்ன ஒழுக்கப் பண்புகளைப் பற்றிப் பேசுகிறார்.இந்த நூல் உருவானதைப்பற்றி திரு.இறையன்பு அவர்களே இதோ இப்படிச் சொல்கிறார்:

 
  ’’சுட்டி விகடனில் எழுதுவதற்கு வாய்ப்பு வந்தபோது சற்று பதற்றமாகத்தான் இருந்தது. மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் நிறைய எழுதியும் பேசியும் இருக்கிறேன் என்றாலும்,குழந்தைகளுக்காக எழுதுவது என்பது எவ்வளவு சிரமம் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.நாமே குழந்தைப் பருவத்துக்குப் பயணப்பட சம்மதிக்கும் போதுதான் அதைச் செவ்வனே செய்யமுடியும் என்பதை நான் உணர்வேன்.அவர்கள் அருகிலேயே அமர்ந்துகொண்டு உரையாடுவதைப் போல பகிர்ந்து கொள்வதுதான் எழுதும் நோக்கத்தை நிறைவேற்றி வைக்கும்.அந்த வகையில் ‘உன்னோடு ஒரு நிமிஷம்!’என்கிற தொடர் எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது.

ஒவ்வொரு இதழிலும் ஒரே ஒரு செய்தியை மாத்திரம் அழுத்தந்திருத்தமாக அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.சின்ன வயதில் நான் எவற்றையெல்லாம் செய்வேன் என்பதைக் காட்சிப்படுத்திப் பார்த்து, அவற்றின் அடிப்படையில் இந்தத் தொடர் தொடர்ந்தது.’’

    ஆகவே நண்பர்களே எவ்வளவுதான் நான் இந்த புத்தகத்தைப் பற்றிச் சொன்னாலும் நீங்கள் இப்புத்தகத்தை  வாசிக்கும் போதுதான் உள் வாங்கிக் கொள்ள முடியும்.நல்ல குழந்தைகளை உருவாக்குவது நல்ல குடிமகன்களை உருவாக்குவதாகும்.நாளைய நல்ல குடிமகன்களுக்கு இந்த பூரணி எமிலியின் வாழ்த்துக்கள்!

                     முதல் பதிப்பு:  பிப்ரவரி 2010

                      பதிப்பகம்      : விகடன் பிரசுரம்

                      விலை           : 90


                                                                                 தொடர்ந்து வாசிப்போம்...

Saturday, October 27, 2012

தமிழ் குடில் பிறந்த கதை



       இதோ இன்று புதிதாக ஒரு எழுத்தாளினி பிறந்திருக்கிறாள்.என்னை நான் எழுத்தாளினி என்று சொல்வதைவிட நல்ல வாசகி என்றே அறிமுகப் படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.காரணம் என் மரணம் நிகழ்கிற வரையில் படித்துக்கொண்டிருக்கவே ஆசை. இந்த வலைப்பூ தொடங்கி நீண்ட நாட்கள் ஆகியும் எதுவும் எழுத முடியாத சூழல். இப்பொழுதுதான் அதற்கான காலம் கனிந்திருக்கிறது.இனிமேல் தொடர்ந்து எழுதிவிட வேண்டும். 

      முதல் பதிவாக இந்த வலைப்பூவின் பெயர் காரணத்தைச் சொல்லவிரும்புகிறேன்.’’தமிழ் குடில்’’ என்பது வெறும் வலைப்பூவுக்கான  பெயர் மட்டுமல்ல இது ஒரு அமைப்பு.ஒரு வீடு என்றால் அதில் பல அறைகள் அடங்கியுள்ளன. அதாவது சமையலறை, குளியலறை, பூஜை அறை இருப்பது போல். இந்த ’’தமிழ் குடில்’’ கீழும்  பல பிரிவுகள் அடங்கியுள்ளன.அதாவது ’வயல் இலக்கிய பூங்கா’,’நன்றும் தீதும்’வீதி நாடக அமைப்பு,’பெரியார் படிப்பகம்’என்ற பல்வேறு அமைப்புகள் இந்த ''தமிழ் குடில்’’கீழ் செயல்பட உள்ளன. இந்த அமைப்பு முழுமையும் தமிழ் இலக்கிய ஆர்வம் உடைய நண்பர்களைக் கொண்டே செயல்பட இருக்கின்றன. 



   இதில் உள்ள ஒவ்வொரு அமைப்புகளின் பெயர்கள் அனைத்தும் காரணப்பெயர்தான்.’வயல் இலக்கியப் பூங்கா’என்பது எங்கள் கிராமம் வயல் சார்ந்து அமைந்திருப்பதால் இப்பெயர் சூட்டியுள்ளோம்.ஒவ்வொரு மாதமும் நல்ல இலக்கிய ஆளுமைகளைக் கொண்டு கிராமத்து மக்களுக்கு நல்ல இலக்கியங்களை அறிமுகப்படுத்தவேண்டும்.கிராமத்தில் உள்ள வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் இனம் கண்டு ஊக்குவிக்க வேண்டும்.ஏற்கனவே உள்ள அவ்வளவாக அறியப்படாத கிராமத்து எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் அடையாளம் கண்டு அவர்களைப் பாராட்டி அங்கீகரிக்க வேண்டும்.இப்படியாக இன்னும் சில திட்டங்கள் உள்ளன.முக்கியமாக இந்த அமைப்பு பசுமை நிறைந்த வயல்களின் நடுவேதான் கூடி களையும்.


    அடுத்தது ’’நன்றும் தீதும்’’ என்னும் வீதி நாடக அமைப்பு. இந்த நாடக அமைப்பானது ஒவ்வொரு வாரமும் பல்வேறு கிராமங்களுக்கு சென்று நல்ல நாடக ரசனை கொண்ட நண்பர்கள் மூலம் நடத்தப்படும்.நம்மைச் சுற்றி பல நன்மைகளும் தீமைகளும் அடங்கியுள்ளன.ஆகையால் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.இந்நாடக அமைப்பானது சமுதாயத்தில் நிலவும் இன்றைய முக்கியப் பிரச்சனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி வியிப்புணர்வு ஏற்படுத்துவது,விளிம்பு நிலை மக்களுக்கு  கல்வி குறித்த வியிப்புணர்வு ஏற்படுத்துவது என்று இப்படியாக இந்நாடக அமைப்பு அமைய உள்ளது.


    இங்கு ’’பெரியார் படிப்பகம்’’ பற்றி நிறையவே சொல்லியாக வேண்டும். காரணம் இது மற்ற நூலகம் போல் அல்லாமல் பல புதுமைகளைத்தாங்கி கிராமத்தில் அமையும் நூலகம்.இது மற்ற நூலகங்களுக்கு ஒரு முன்னோடியாக அமையும் என்பதில் ஐயம்மில்லை.காரணம் இந்த படிப்பகத்தின் நோக்கம் கிராமத்தில் இருக்கும் படிக்காத முதியோர்களை(தாத்தா, பாட்டிகள்)மனதில் வைத்தே உருவாக்க எண்ணியுள்ளோம்.அதன்படி விவசாய வேளை முடிந்ததும் மற்றும் விவசாயம் இல்லாத காலங்களில் வெறுமனே பொழுதைக் கழிக்க விடாமல் இந்த பெரியார் படிப்பகத்திற்கு ஒன்றுகூட்டி அவர்களுக்காக நிறைய தமிழறிஞர்களின் பேச்சுக்கள் அதாவது சொற்பொழிவுகள்,ஆடியோ புத்தகங்கள் போட்டு கேட்க வைப்பதே முக்கிய நோக்கமாகும்.இதன் மூலம் பல நல்ல நன்மைகள் நடந்திடும் என்பதில் உறுதியாக உள்ளோம்.காரணம் முதியோர்கள் தங்களின் கடைசி காலம் பயனுள்ள வகையில் கழிக்கவும்,ஒரு வெறுமை தெரிந்திடாமல் இருக்கவுமே இந்த நூலகத்தின் விருப்பம்.


    இந்த படிப்பகம் நல்ல அற்புதமான இயற்கை சூழலில் அமையுமாறு முடிவு செய்துள்ளோம்.இங்கு வரும் அனைவரையும் படிக்கும் ஆர்வத்தை தூண்டுவதே இந்நூலகத்தின் நோக்கம். இப்பொழுது நான் எவ்வளவு சொன்னாலும் எங்களுடைய நூலகத்தின் கனவை விவரித்திடமுடியாது.அது அமைந்தப் பிறகுதான் இதனுடைய அருமை புரிய ஆரம்பிக்கும்.எந்தளவிற்கு சிறப்புடன் அமைய முடியுமோ அவ்வளவு முயற்சி எடுத்து அமைக்க திட்டமிட்டுள்ளோம்.



   இத்துடன் நின்று விடவில்லை எங்களின் அமைப்பு.நம் கிராமத்து விளையாட்டுக்களை மீட்டெடுக்க வேண்டும்.தமிழர்களின் பண்டிகையாகிய பொங்கல் அன்று நான்கு நாட்களும் நம் கிராமத்து விளையாட்டு சார்ந்த போட்டிகள் நடத்துவது,விவசாயிகளிடையே இயற்கை விவசாயம் குறித்து வியிப்புணர்வு ஏற்படுத்துவது,கிராமத்து மாணவர்களை ஆங்கில புலமையுடன் உருவாக்குவது,போட்டித்தேர்வுகளை எப்படி எதிர் கொள்வது என்று இப்படியாக கிராமத்து மாணர்களை பல்வேறு திறமைகளுடனும் நல்ல ஆளுமைகளுடனும் உருவாக்குவதே எங்களின் முக்கியக் கடமையாகக் கொண்டுள்ளோம்.


     இப்படி நாங்கள்‘’தமிழ் குடில்’’மூலம் எங்களின் சமுதாயப் பணி தொடங்க முடிவு செய்துள்ளோம்.இது ஒரு கனவு கிராமம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சிறிய தொடக்கம்தான்.நாங்கள் இப்படியான ஒரு கிராமத்தில் வாழவே ஆசைப்படுகிறோம்.