Friday, November 30, 2012

ஆயிஷா...



இன்று ஆயிஷா என்னும் அற்புதமான குறும்படம் பார்த்தேன்.ஆனால் இது குறும்பட விமர்சனம் அல்ல. நான் அதிகமாக படங்களையும் பார்ப்பவள் அல்ல.அதுமட்டுமில்லாமல் திரைவிமர்சனம் மட்டும் என் வலைப்பூவில் எழுதி என் நேரத்தை வீணாக்கக் கூடாது என்ற முடிவிலும் இருக்கிறேன். அதற்காக நிறைய வலைப்பூக்கள் இருக்கின்றன.ஆனால் இந்த படம் பார்த்தப் பிறகு என் மனதில் தோன்றியதை என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை. ஆகையால் இதை குறும்பட விமர்சனமாக நினைக்காமல் என் மனதில் தோன்றிய வலிகளையும், ஆதகங்களையும் உங்களிடம் பகிர்ந்துக்கொள்வதாக நினையுங்கள்.

  ’’ஆயிஷா’’ சில வருடங்களுக்கு முன்னால் நான் புத்தகமாகப் படித்து தூக்கத்தைத் துளைத்ததுண்டு. இரா.நடராசன் அவர்கள் எழுதிய குறுநாவல். மீண்டும் இப்பொழுது குறும்படமாக பார்த்தப் பிறகு என் வேதனையையும் ஆதங்கத்தையும் அடக்க முடியவில்லை. யார் மீது வேதனை? யவர் மீது ஆதங்கம் என்று கேட்கிறீர்களா? எல்லாம் நமது இந்தியக் கல்வித்துறையின் மீதுதான். ஆங்கிலேயர்கள் நம்மை தொடர்ந்து அடிமைகளாக வைத்திருப்பதர்க்காகவும் முட்டால்களாக இருக்கச்செய்யவுமே மெக்காலே என்பவரால் கொண்டுவரப்பட்ட கல்விமுறைதான் இப்பொழுது இருக்கும் நம் கல்விமுறை. ஆங்கிலேயர்கள் சென்று அறுபத்தைந்து ஆண்டுகள் ஆன பின்பும் இன்னும் நாம் அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில்தான் 2020-ல் வல்லரசு, அடுத்த சூப்பர் பவர் என்று கூப்பாடு போடுகிறது நம் அரசு.

  இந்த குறும்படம் ’ஆயிஷா’ என்னும் ஏழாம் வகுப்பு மாணவி மூலம் நம் கல்வி அமைப்பைச்(Educational System) சாடுகிறது. எனக்குத்தெரிந்து ஒவ்வொரு குழந்தையும் ஒரு ஆயிஷாதான். நமது கல்விமுறையும் ஆசிரியர்களுமே ஆயிஷா உருவாவதை தடுக்கிறார்கள். எந்தக்குழந்தை(மாணவர்கள்) கேள்விகேட்டாலும் அக்குழந்தையை ஊக்கப்படுத்தி (குறைந்த பட்சம் பதிலாவது சொல்லலாம்)ஆராச்சியில் ஈடுபடமளவுக்கு தூண்டவேண்டும். ஆனால் பாவம் இங்கு என்ன செய்வது ஆசிரியர்களுக்கே விடை தெரிவதில்லை. இதில் எங்கே ஆராய்ச்சி? நம் படத்தின் நாயகி ஆயிஷா ஆசிரியர்களை கேள்விமேல் கேள்வி கேட்கிறாள். அவள் அறிவுப்பசியில் ஆசிரியர்களே அறியாத(அறிந்துக் கொள்ள விருப்பமில்லாத)ஆங்கில அறிவியல் புத்தகங்களைத் தேடித்தேடிப்  படிக்கிறாள்.  இப்புத்தகங்கள் ஏன் தமிழில் இல்லை என்று வேதனைப்படுகிறார்கள். நீங்களே(ஆசிரியர்களே)ஏன் தமிழில் எழுதக்கூடாது? என் போன்ற மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்குமே என்று பாரதி சொன்னானே ’’பிறமொழியில் உள்ள நல்ல புத்தகங்களையெல்லாம் தமிழில் படைத்திட வேண்டும்’’ என்று அதை இங்கு நமக்கு நினைவூட்டுகிறாள்.அவளின் அறிவுத் தேடுதல் நம்மை சிலிர்க்க வைக்கின்றன. அவள் ஆசிரியர் அடித்தாள் வலி தெரியாமல் இருக்க ஏதாவது மருந்து இருக்கிறதா என்னும் போது நம் கண்களில் கண்ணீர் வரவைப்பதோடுமட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தின் மீதும் கோபத்தை ஏற்படுத்துகிறாள்.

   இந்தக் குறும்படம் இத்துடன் நின்று விடவில்லை. ம்ற்றுமொரு உண்மையையும் சுட்டிக் காண்பிக்கிறது. அதாவது நம் கிராமத்தில் இன்னும் இருக்கும் வழக்கம். பெண்பிள்ளையை ஏன் அதிகம் படிக்க வைக்க வேண்டும். அவள் இன்னோர் வீட்டுக்குப் போகப்போகிறவள்தானே. அவள் அடுப்படிக்கும், கணவனுக்கு பணிவிடை செய்யவும் பிறந்தவள்தானே, பிறகு இவளை ஏன் அதிகம் படிக்க வைக்க வேண்டும் என்னும் கிராமத்துப் பெற்றோர்களின் மனோநிலையை அல்லது அறியாமையை விளக்குகிறது. ’ஓர் ஆண் கல்வி கற்றால் அது அவனுக்கு மட்டுமே பயன், ஆனால் ஒரு பெண் கல்வி கற்றால் அந்த குடும்பத்திற்கே பயன்’ என்னும் உண்மையை ஏன் நம் பெற்றோகள் புரிந்துக்கொள்ள மறுக்கிறார்கள் என்னும் போது வேதனைதான் மிஞ்சுகிறது.

 
  இங்கு ஒன்று சொல்லியே ஆக வேண்டும். ’ஆசிரியர் என்பது அறப்பணி,அதற்கே உன்னை அற்பணி’ என்பது மூத்தோர் சொல்’. அதுமட்டுமில்லாமல் ’எழுத்து அறிவித்தவன் இறைவன் என்று சொவார்கள்’. அந்த அளவிற்கு ஆசிரியர்களை கடவுளாகப் பார்க்கிறது நம் சமூகம். ஆனால் ஆசிரியர்கள் வேலைக்கு வந்த உடன் படிப்பதையே நிறுத்தி விடுகிறார்கள்(ஒரு சில ஆசிரியர்களைத் தவிர). ஆசிரியர்கள் இதை ஒரு வேலையாகத்தான் பார்க்கிறார்கள். இதை தவமாகப் பார்ப்பதில்லை. தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவிரும்புவதில்லை. ஓர் ஆசிரியர் என்பவர் அனைத்து துறைகளிலும் குறைந்தபட்ச அறிவுடனாவது இருக்க வேண்டும் என்பதைக்கூட மறந்து விடுகிறார்கள்.  நான் அறிவியல் ஆசிரியர்தானே பிறகு நான் ஏன் கணிதம் கற்கவேண்டும்?,நான் ஏன் ஆங்கிலம் கற்க வேண்டும்? என்று கேட்கிறார்கள். இவர்கள் மாணவர்களை விட படிப்பதற்கு சோம்பேறிகளாக இருக்கிறார்கள். பிறகு இவர்கள் போய் எங்கு ஆசிரியர் பணியை அறப்பணியாக நினைக்கப் போகிறார்கள்.

       இப்பொழுது தமிழக அரசு கொண்டுவந்துள்ள ’ஆசிரியர் தகுதித்தேர்வு திட்டம்’ பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.அப்பொழுது புரியும் ஆசிரியர்களின் நிலமை.

  மீண்டும் இக்குறும் படத்திற்கு வருவோம். இப்படத்தில் ஒளிப்பதிவு சரியாக அமையவில்லை. அதாவது முழுவதும் இரவில் படபிடிப்பு நடந்தது போலவே தெரிகிறது. மற்றபடி சிறு தொய்வு கூட இல்லை. இயல்பாக இருக்கிறது. ஆசிரியையும், ஆயிஷாவும் மிகச் சிறப்பாகவே நடித்துள்ளனர். அற்புதமான இயக்கம். இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் சிரம் தாழ்த்தி என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரா.நடராசன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

   அனைவரும் குறிப்பாக ஒவ்வொரு பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவசியம் இக்குறும்படத்தைப் பாருங்கள். உங்கள் குழந்தைகளையும் பார்க்க வையுங்கள். இனிமேலாவது குழந்தைகளை மதிப்பெண்களுக்காக படிக்க வைக்காமல் விஷயத்தைத் தெரிந்துக்கொள்வதற்காக படிக்க வையுங்கள். பாடபுத்தகத்தை தாண்டியும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். குழந்தைகள் கேள்விகள் கேட்டாள் வயதுக்கு மீறிய கேள்வி கேட்கிறாய் என்று தடித்த வார்த்தைகளால் தண்டிக்காமல் அவர்களுக்கு புரிய வையுங்கள்.

  இக்குறும்படம் ஒவ்வொரு பள்ளியிலும் திரையிடவேண்டும். நம் அரசுக்கும் பார்க்கச் சொல்லி பரிந்துரைக்க வேண்டும்.

 ’’ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு ஆயிஷாதான். அனைத்து மாணவ மானவிகளும் ஆயிஷாக்களாக உருவாகட்டும். ஆயிஷாக்கள்தான் நமக்குத் தேவைபடுகிறார்கள். ஆயிஷாக்கள் பிறக்கட்டும், ஆயிஷாக்கள் உருவாகட்டும்’’.

இப்பொழுதே முடிவு செய்து விட்டேன். எனக்கு பிறக்கப் போகும் பெண்குழந்தைக்கு ’ஆயிஷா’ பெயர் வைக்க வேண்டும் என்று.

இப்படத்தைக் காண:  http://www.youtube.com/watch?v=8-BuyTExd_o

    

Monday, November 26, 2012

இலக்கிய ஆளுமைகள்-1


   தினமணியில்  ஒவ்வொரு ஞாயிறும் ’’தமிழ்மணிப்’’ பகுதி வெளிவருகிறது என்பது தினமணியைத்தொடர்ந்து வாசிக்கும் அனைத்து தமிழ் ஆர்வளர்கள் நன்கு அறிவர்.அதில் ஒவ்வொரு வாரமும் ஒரு இலக்கிய ஆளுமைகளைப் பற்றி சமகால எழுத்தாளர்கள் எழுதிவந்தனர்.புகழ்ப் பெற்ற எழுத்தாளர்களை நாம் நன்கு அறிவோம்.ஆனால் நாம் அறியாத பல நல்ல எழுத்தாளர்கள் நிறையப் பேர் இருந்திருக்கின்றனர் என்பது  இத் தொடரைப் படிக்கும் போதுதான் தெரிந்தது. நல்ல எழுத்தாளர்களை காலம் மறந்துவிட்டது. தினமணி ’’தமிழ்மணி’’ மூலம் நாம் அந்த எழுத்தாளர்களை அறிந்து கொண்டோம்.இப்பொழுதுள்ள தலைமுறையினரும்,வருங்கால தலைமுறையினரும் இந்த எழுத்தாளர்களை தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொருவாரமும் என் வலைப்பூவில் அந்த இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய  தொடர்கட்டுரையை தொகுக்கலாம் என்று நினைக்கிறேன்.தொடர்ந்து என் கட்டுரையுடன் இதனையும் நீங்கள் படிக்கலாம்.தினமணிக்கு என் நன்றிகள்.

 இந்த வார ஆளுமை:

"சித்தர் இலக்கியச் செம்மல்' மீ.ப. சோமு

-திருப்பூர் கிருஷ்ணன்


 திருநெல்வேலிப் பகுதியில் பிறந்து இலக்கியத்தைக் கணிசமாக வளர்த்த குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் பலர் தமிழில் உண்டு. தொ.மு.சி.ரகுநாதன், வல்லிக்கண்ணன், டி.கே.சி., தி.க.சிவசங்கரன் என வளரும் அந்தப் பட்டியலில் அமரர் சோமுவும் இணைகிறார். திருநெல்வேலி சந்திப்பின் அருகிலுள்ள மீனாட்சிபுரம்தான் அவரது சொந்த ஊர். பிறந்த தேதி 17.6.1921.

  சிறுகதை எழுதும் சிலருக்கு நாவல் எழுத வருவதில்லை. நாவல் எழுதுபவர்களிலும் சிலருக்குச் சரித்திர நாவல் எழுத வருவதில்லை. (அதனாலேயே சரித்திர நாவல் இலக்கியமல்ல என்று சொன்ன எழுத்தாளர்களும் தமிழில் உண்டு) மீ.ப.சோமு சிறுகதை, நாவல், நாடகம், கவிதை, பயண இலக்கியம் என இலக்கியத்தின் பல துறைகளில் முயன்று எழுதி வெற்றிபெற்ற மிகச் சில சாதனையாளர்களுள் ஒருவர்.

  சோமு இயல்பிலேயே ஆன்மிக நாட்டம் மிகுந்தவர். தமிழின் பக்தி இலக்கியத்தில், குறிப்பாக சித்தர் பாடல்களில் தோய்ந்த பக்தர் அவர். நெல்லை சுந்தர ஓதுவா மூர்த்திகள் என்ற புகழ்பெற்ற தேவார இசைமணி, திருமதி சோமுவின் பெரியப்பா.

   இளைஞராக இருந்தபோதே எழுத்தார்வம் கொண்டு நிறைய எழுதினார். ஆனால் பரவலாக அவர் அறியப்பட்டது, விகடன் வழங்கிய "பாரதி தங்கப் பதக்கம்' அவரது சிறுகதைக்குக் கிடைத்தபோதுதான்.

  சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்வான் பட்டம் பெற்ற வகையில், முறையாகத் தமிழ் கற்ற தமிழ்ப் பண்டிதரும்கூட. மு.வரதராசன், நா.பார்த்தசாரதி போன்றோர் வரிசையில் பழந்தமிழ் அறிந்து, தற்கால இலக்கியத்தில் சாதனை படைத்தவர்.

  சம்ஸ்ருதம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் புலமை பெற்றவர். வெளிதேச இலக்கிய அமைப்புகளில் தமிழிலக்கியம் குறித்து ஆங்கிலச் சொற்பொழிவுகள் செய்திருக்கிறார். அவரது ஆங்கிலச் சொற்பொழிவுகளின் பெருமை பற்றி "தி டைம்ஸ்' என்ற

 ஆங்கில நாளேடு வியந்து பாராட்டிக் கட்டுரை எழுதியதுண்டு.

  தமிழில் அநாயாசமான சொல் வளத்தோடு தெளிந்த நீரோடைபோல் சொற்பொழிவாற்றக் கூடியவர். அகில இந்திய வானொலியில் பணிபுரிந்ததாலோ என்னவோ, அவரிடம் ஒரு வித்தியாசமான ஆற்றல் இருந்தது. பேசத் தொடங்குவதற்கு முன் அமைப்பாளர்களிடம் எத்தனை நேரம் பேசவேண்டும், அரைமணி நேரமா, இருபத்தைந்து நிமிடமா என்றெல்லாம் விசாரித்துக் கொள்வார். மேடையேறினால் கைக்கடிகாரத்தைப் பார்க்காமலே மிகச் சரியாகக் குறித்த நேரத்தில் முடித்துவிடுவார். அவரது அந்த ஆற்றல் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுண்டு.

  "சித்தர் இலக்கியச் செம்மல்' என்று குறிப்பிட வேண்டுமானால் தமிழில் மீ.ப.சோமுவைப் பற்றி மட்டும்தான் அப்படிக் குறிப்பிட முடியும். திருமூலரின் திருமந்திரம் உள்பட ஏராளமான சித்தர் பாடல்கள் அவருக்கு மனப்பாடம். சிலப்பதிகாரம் குறித்து ம.பொ.சி. பேசிக் கேட்கவேண்டும் என்று சொல்வதுபோலவே, சித்தர் பாடல் பற்றி மீ.ப.சோமு பேசிக் கேட்க வேண்டும் என்றும் சொல்வதுண்டு. அவர் சித்தர் பாடல்களை விளக்கிப் பேசினால், அந்தத் தமிழின் குளுமையைப் பருகவென்றே ஏராளமான கூட்டம் வருவதுண்டு.

   கொஞ்ச காலம் வானொலியில் பணிபுரிந்துகொண்டே கல்கி வார இதழிலும் ஆசிரியராக இருந்தார். (1954 முதல் 1956 வரை). இவர் வானொலியில் வகித்தது, தென் மாநிலங்களுக்கான தலைமை அமைப்பாளர் என்ற பெரிய பதவி.

   கல்லறை மோகினி, திருப்புகழ்ச் சாமியார், கேளாத கானம் ஆகிய சிறுகதைத் தொகுதிகளின் ஆசிரியர். கடல் கண்ட கனவு உள்ளிட்ட பல நாவல்களை எழுதியவர். இவரது "ரவிச்சந்திரிகா' நாவல் ஏராளமான வாசகர்களால் பாராட்டப்பட்டு, பெரும்புகழ் பெற்ற நாவல். தொலைக்காட்சித் தொடராகவும் பின்னர் அது வெளிவந்தது.

   தத்துவச் சிந்தனை சார்ந்த மரபுக் கவிதைகளைப் படைப்பதில் வல்லவர். அந்த வகையில் இவரது இளவேனில் கவிதைத் தொகுதி குறிப்பிடத்தக்கது. பிள்ளையார் சுழி, நமது செல்வம் முதலிய கட்டுரைத் தொகுதிகளின் ஆசிரியரும்கூட. பற்பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்.

   மீ.ப.சோமு, தம் சமகாலத்தில் வாழ்ந்த இருபெரும் ஆளுமைகளுடன் நெருங்கிப் பழகும் பேறுபெற்ற பெருமைக்குரியவர். ஒருவர் மூதறிஞர் ராஜாஜி. இன்னொருவர் கம்பன் புகழ்பாடும் டி.கே.சி. ராஜாஜியின் கடைசிப் பதினைந்து ஆண்டுகளில் பெரும்பாலும் அவரது இரவு உணவு சோமு வீட்டில்தான்.

   மீ.ப.சோமு எழுதிய நாடகங்கள் பல பிரபலமானதற்கு, அவரது தமிழால் கவரப்பட்டு டி.கே.எஸ். சகோதரர்கள் அவற்றை மேடை ஏற்றியதும் ஒரு முக்கியக் காரணம்.

   பல பரிசுகள் இவர் எழுத்தாற்றலைத் தேடி வந்தன. இவரது "அக்கரைச் சீமையிலே' என்ற பயண நூலுக்கு சாகித்ய அகாதெமி பரிசு கிடைத்தது. படைப்பிலக்கியம் அல்லாத நூலுக்கு அகாதெமி பரிசு கொடுத்ததைப் பற்றி எப்போதும் போல், அப்போதும் சில விமர்சனங்கள் எழத்தான் செய்தன. ஆனால் ஏ.கே.செட்டியார், மீ.ப.சோமு போன்றோர்தான் தமிழ்ப் பயண இலக்கியத்தின் முன்னோடிகள் என்பதை விமர்சித்தவர்களே கூட மறுக்கவில்லை.

   எம்.ஏ.எம். அறக்கட்டளைப் பரிசு, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் பரிசு, தமிழக அரசுப் பரிசு, பல்கலை வித்தகர், இசைப் பேரறிஞர் போன்ற பட்டங்கள் என இவரது பெருமைகள் இன்னும் பல.

   சிக்கனம்பாறை ஆசிரமத்தைச் சேர்ந்த கண்ணப்ப சுவாமிகள் என்ற சித்தர்தான் இவரது குரு. சித்தரிடம் நேர்முகமாக ஆன்மிகப் பயிற்சிகளைக் கற்றார். உடலில் உள்ள பல மையங்களில் மனத்தை ஒருமுகப்படுத்தி மானசீக பூஜை செய்யும் பயிற்சியும் அவற்றில் ஒன்று. அந்த பூஜையை நாள்தோறும் விடாமல் செய்துவந்தார். அக்காலத்தில் பெரும் பதவிகளில் இருந்த பலர் மீ.ப.சோமுவிடம் மந்திர உபதேசம் பெற்றவர்களும் கூட.

   தம் ஒரே மகளுக்கு தமது நன்றியறிதலைத் தெரிவிக்கும் வகையில், வித்தியாசமான பெயரொன்றை வைத்தார் சோமு. சிதம்பர ராஜ நந்தினி என்பது மகளின் பெயர். முதல் வார்த்தை டி.கே.சி.யையும் இரண்டாம் வார்த்தை ராஜாஜியையும் மூன்றாம் வார்த்தை கல்கியையும் ஞாபகப்படுத்துவது. (சோமுவின் புதல்வி ராஜாஜியின் மடியில் வளர்ந்த செல்லக் குழந்தையும் கூட). உயர் நீதிமன்ற வழக்கறிஞரான எஸ்.கோமதிநாயகம் மீ.ப.சோமுவின் மாப்பிள்ளை.

   தம் மனைவி காலமானபோது வயோதிகத்தால் தளர்ந்திருந்த சோமு, சற்று விரக்தி அடைந்தார். ஆனாலும், இறுதிக் காலங்களில் பண் ஆராய்ச்சி மையத்தின் கௌரவ இயக்குநராகப் பதவி வகித்துப் பணியாற்றத் தொடங்கினார். "தமிழே என்னை விட்டு என்றும் பிரியாத என் நிரந்தரத் துணை' என்று அவர் நெகிழ்ச்சியுடன் சொல்வதுண்டு. 1999-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி ஒரு பொங்கல் திருநாளையொட்டி அவர் மறைந்தார். ஆனால், என்றும் மறையாத தமது எழுத்துகளில் அவர் வாழ்கிறார்.