Saturday, May 18, 2013

தாய்மொழிவழிக்கல்வி-3


கல்விச்சாலை என்னும் சிறைச்சாலை!

  இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு இரண்டரை வயது ஆகிய உடனே Pre.K.G-யில் சேர்த்துவிடுகிறார்கள். அம்மா,அப்பாவின் கதகதப்பில் இருக்கவேண்டிய குழந்தைகள் இரண்டரைவயதிலேயே அவனை/அவளை பெரிய அறிவாளியாக்கித்தீருவேன் என்று கங்கணம்கட்டிக்கொண்டு குழந்தைகளை படுத்தும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. அம்மாவிடமும் அப்பாவிடமும் தாத்தா,பாட்டியிடமும் கொஞ்சிவிளையாடிமகிழவேண்டிய குழந்தைகள் கல்விக்கூடம் என்னும் சிறைச்சாலையில் மாட்டிக்கொண்டு தவியாய்தவிக்கிறார்கள். பெற்றோர்கள் குழந்தைகளை குழந்தைகளாய் இருக்கவிடுவதில்லை. இதுபோன்ற பெற்றோர்களைப்பார்த்து ஒரு கேள்விகேட்கவிரும்புகிறேன்: இரண்டரைவயது நிரம்பிய ஒருகுழந்தைக்கு கல்வி என்னவேண்டிக்கிடக்கிறது.? அவர்களுக்கு விளையாட்டல்லவா முக்கியம்.பெரும்பாலான மேலைநாடுகளில் குழந்தைகளை ஆறு வயதில்தான் பள்ளியில் சேர்க்கிறார்கள்.

  பெரும்பாலன பெற்றோர்கள் புலம்புவது அவன்/அவள் கேள்விமேல் கேள்விகேட்டு எங்க உயிர எடுக்கறான். இங்கு இருக்கிறதுக்கு பதிலா பள்ளிக்கூடம் போய்தொலையட்டும் என்பார்கள். குழந்தையென்றால் குழந்தையாகத்தான் இருக்கும். அங்குமிங்கு ஓடும்,அது என்ன?இது என்ன? என்று ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்கத்தான் செய்யும். அப்படியிருந்தால்தான் அது குழந்தையாக இருக்கிறது என்று அர்த்தம். அதைவிடுத்து, அதை தொடாதே, இதைதொடாதே என்று அவர்களை ஒன்றும் செய்யாமல் அமைதியாக உட்கார் என்றால் ஒருகுழந்தையால் எப்படி எதுவும் செய்யாமல் அமைதியாக உட்காரமுடியும்? சரி, நம்மையே எடுத்துக்கொள்வோம், நாமே ஒரு மணிநேரம் எந்த செயலும் செய்யாமல் சும்மா உட்கார்ந்து கொண்டியிருப்போமா? அப்படியிருந்தால் நமக்கே பைத்தியம் பிடித்துவிடுவதுபோல் இருக்கும். அப்படியிருக்கும்போது குழந்தைகளுக்கு?

  உங்கள் குழந்தைகளை தாத்தா,பாட்டியிடம்(அது பக்கத்துவீட்டு தாத்தா,பாட்டியாககூட இருக்கலாம்)விடுங்கள். நல்ல நீதிக்கதைகளை சொல்லிவளரப்பார்கள்.இப்படி வளரும் குழந்தைகள் நல்ல ஒழுக்கபண்புள்ள மனிதர்களாக பிற்காலத்தில் திகழ்வார்கள்.

  சரி,வீட்டில் பெற்றோர்தான் இப்படியென்றால் கான்வெண்ட்கள் பெற்றோர்களைவிட கொடுமையாக இருக்கிறது. இந்த பிஞ்சு குழந்தைகளை எப்படி வளர்க்கவேண்டும் என்று தெரிவதில்லை. இந்தவயதிலேயே ரேங்க் போட்டு அவர்களில் நீ அறிவாளி, நான் முட்டாள் என்று பேதத்தை உருவாக்குகிறார்கள்.

  உங்கள் நெஞ்சைத்தொட்டு சொல்லுங்கள், இன்று எத்தனை குழந்தைகள் நான் பள்ளிக்குப்போகிறேன் என்று அவர்களாகவே முன்வந்து மகிழ்ச்சியாக செல்கிறார்கள்? அந்தளவு நரகமாக உள்ளது நமது கல்விச்சாலைகள்.(ஒருசில விதிவிலக்கு பள்ளிக்கூடங்கள் உள்ளன என்பது ஆறுதல்தரும் விஷயம்).

  குழந்தைகளை விளையாடும்போது நீங்கள் கவனித்தால் ஒன்று தெரியும், அவர்கள் ஆசிரியர்,மாணவர்கள் விளையாட்டு விளையாடுவார்கள்.அதில் நான்தான் டீச்சரா இருப்பேன்னு சொல்லி ஓடிப்போய் கையில் ஒரு குச்சியை எடுத்துக்கொள்ளும். இதிலிருந்து என்ன தெரிகிறது ஆசிரியர் என்றாலே கையில் பிரம்புடன்தான், இருப்பார்கள், குழந்தைகளை அடிப்பார்கள் என்ற ஒரு பிம்பத்தை நமது பெரும்பாலான ஆசிரியர்கள் ஏற்படுத்திவைத்திருக்கிறார்கள்.

   இந்த சூழ்நிலைகளையெல்லாம் நாங்கள் கவனித்ததால்தான் நாங்கள் ஒருமுடிவெடுத்துள்ளோம் எங்கள் குழந்தைகளை ஆறு வயதில்தான் பள்ளிக்கு அனுப்புவதென்றும்,ஐந்தாம் வகுப்புவரையில்தான் பள்ளிக்கு அனுப்புவதென்றும், அதெற்கு மேல் நாங்கள் வீட்டிலேயே அவர்களை படிக்க வைக்கலாமென்றும் முடிவெடுத்துள்ளோம்.எங்களின் முடிவு உங்களுக்கு பைத்தியகரமானதாக இருக்கலாம். ஆனால் இதோ கீழே உள்ள தொடர்பில் சென்று படித்துப்பாருங்கள் ஒரு தகப்பன் எப்படி தன்குழந்தைகளை வள்ர்க்கிறார்? எப்படி வளர்க்கவேண்டுமென்பது உங்களுக்கே புரியும்.இதைப்படித்தபிறகு நிச்சயம் நீங்களும் எங்கள் வழியைப்பின்பற்றுவீர்கள்.

http://writersamas.blogspot.in/2010/11/45e.html

No comments:

Post a Comment