Friday, August 2, 2013

நான் வாசித்த நன்னூல்-2 / வாடாமல்லி-வாசம் வீசும் மல்லி


   இந்த வருடத்தில் குறைந்தது இருபத்தைந்து நல்ல தமிழ் நாவல்களையாவது வாசித்துவிட வேண்டும் என்ற முடிவில் சில நாவல்களை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.ஒரு நல்ல (சமுதாய)நாவல்,சிறுகதை என்பது ஒரு கருத்தை எடுத்துக்கொண்டால் அதன் அடி ஆழம்வரை சென்று அலசி எழுதப்படுவது, வாசித்து முடித்ததும் குறைந்தது இரண்டு மூன்று நாட்களாவது நம்மை தூங்கவிடாமல் புரட்டிப்போடுவது, நம்மை ஏதோ ஒன்று அழுத்திக்கொண்டிருப்பதுபோல ஒரு உணர்வை ஏற்படுத்துவது ஆகியவையே நல்ல நாவலுக்கு இலக்கணமாக நான் வரையறுத்துக்கொண்டுள்ளேன். சுகம் ஊட்டும், சுவையூட்டும் எழுத்துக்களை நான் வாசிப்பதில்லை என்ற முடிவிலும் இருக்கிறேன்.

   மூன்றாம் பாலின(அரவாணிகள்) மக்களை போகப்பொருளாகவும், இழிநிலை மக்களாகவும் பார்க்கும் ஒரு கேடுகெட்ட சமூகத்தில்தான் இன்னும் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதே கசப்பான உண்மை. ஏதோ நாமெல்லாம்(ஆண்கள்,பெண்கள்) பரிசுத்தமானவர்களாகவும், மூன்றாம் பாலின மக்கள் மட்டும் இந்த உலகத்தில் தீண்டதகாதவர்களாகவும், வாழத்தகுதியற்றவர்களாகவும் நாம் அவர்களை மிக கேவலமாக நடத்துகிறோம். அவர்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளியதில் மிகப்பெரும் பங்கு நமக்கும் நமது அரசாங்கத்திற்கும் உண்டு.

   மேற்கண்ட சிந்தணைகள் எனக்கு எழக்காரணம் இப்பொழுது நான் வாசித்து முடித்த சு.சமுத்திரம் அவர்களின் ‘’வாடாமல்லி’’ நாவல்தான். 80களில் வெளிவந்த இந்நாவல் மூன்றாம் பாலின மக்களின் வாழ்வை போகிறபோக்கில் எழுதாமல் மிக ஆழமாக சென்று அவர்களின் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து எழுதியுள்ளார்.

   ’சுயம்பு’ என்னும் விவசாய குடுமபத்தைச் சார்ந்த இளைஞன் மிகக் கடினப்பட்டு படித்து அதிக மதிப்பெண்கள் பெற்று பொறியியல் கல்லூரியில் சேர்ந்து சில மாதங்கள்கூட ஆகாத நிலையில் அவனுக்குள் இருக்கும் பெண் தன்மை வெளிப்பட்டு அதனால் அக்கல்லூரியில் அவன்படும் அவமானங்களால் கல்லூரிக்கு செல்ல மறுக்கிறான். அவனுடைய பெண் தன்மையால் அவனுடைய அக்காவின் திருமணமும் நின்று போய்விடுவதால் வீட்டில் உள்ளவர்கள் சுயம்புவை மிக கொடுரமான முறையில் அவனை அடித்து உதைக்கிறார்கள். பிறகு தன் வீட்டைவிட்டு வெளியேறி மூன்றாம் இன மக்களுடன் இணைந்துகொள்வது, அங்கு காவலர்களால் அம்மக்களை கொடுமைப்படுத்துவது, பிறகு அங்கிருந்து தப்பித்து டெல்லிக்குச் சென்று அவன் இந்த சமூகத்தில் போடும் எதிர் நீச்சல்களும் சவால்களுதான் கதை.

   மருத்துவமாணவன் டேவிட் மூலம் அரவாணிகளைப் பற்றி ’’அவர்கள்(அரவாணிகள்) நம்மிடையே சமநிலை ஏற்படுத்த வந்தவர்கள்’’ என்று விளக்கம் கொடுப்பார் பாருங்கள் அது இக்காவியத்தின் உச்சம்.

   நான் ஏற்கனவே சொன்னது போல போகிறபோக்கில் எழுதாமல் மிகவிரிவான களஆய்வு செய்து இக்காவியத்தை படைத்துள்ளார் எழுத்தாளர் சு.சமுத்திரம். இந்நாவலைப் படித்துமுடித்ததும் ஒரு உண்மை மட்டும் விளங்கிற்று. 80களில் அவர்களை இச்சமூகம் எப்படி நடத்தியதோ அதேபோலத்தான் 2013லும் நடத்திக்கொண்டிருகின்றது. கடுகளவுக் கூட அவர்கள் குறித்த நம் பார்வையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

   என்னைப்பொறுத்தவரையில் சு.சமுத்திரம் அவர்களின் ’வேரிலே பழுத்தபலா’-விற்கு சாகித்திய அகதாமி விருது கொடுத்ததற்குப் பதில் ‘’வாடாமல்லி’’-க்கு கொடுத்திருக்கலாம்.

   சு.சமுத்திரம் அவர்களே நீங்கள் இருக்கும் திசை நோக்கி கைகூப்பி வணங்குகிறேன்...

No comments:

Post a Comment