Tuesday, August 6, 2013

நான் வாசித்த நன்னூல்-3 குறிஞ்சி மலர்

   கடந்த பத்து மாதங்களுக்குள்ளாக நா.பார்த்தசாரதி அவர்களின் ‘’குறிஞ்சி மலர்’’ நாவலை இரண்டு முறை நுகர்ந்துவிட்டேன்(வாசித்துவிட்டேன்).கையில் எடுத்தால் வாசித்து முடிக்காமல் வைக்க முடியாது. எத்தனைமுறை வாசித்தாலும் ஒவ்வொருமுறையும் நமக்குள் மிகப்பெரிய வலியை ஏற்படுத்தும். வாசித்து முடித்து இரண்டு மூன்று நாட்களாவது நம்மை தூங்கவிடாமல் செய்துவிடும். இந்நாவலில் வரும் பூரணி-அரவிந்தன் போன்ற இலட்சியமிக்க இளைஞர்கள் தமிழ்ச் சமூகத்தில் காலந்தோறும் தோன்ற வேண்டும் என்பது இந்நாவலாசிரியனின் விருப்பம். அறுபதுகளிலும் அதன் பின்னரும் இந்நாவல் ஏற்படுத்திய தாக்கத்தால் நிறையப்பேர் தன் குழந்தைகளுக்கு பூரணி, அரவிந்தன் என்றே பெயர் வைத்தனர் என்றால் இந்நாவலின் வீரியத்தை தனியாக விளக்கத்தேவையில்லை.

  என்னுடைய வருத்தம் இன்றைய காலங்களில் இதுபோன்ற நாவல்கள் அதிகம் வருவதில்லையே என்பதுதான்.

  சென்ற வருடம் வெளிவந்த வைரமுத்துவின் ‘மூன்றாம் உலகப்போர்’ முழுமையான நாவல்வடிவம் இல்லையென்றாலும் உரைநடை கலந்த நாவல் என்று சொல்லலாம். இந்நாவல் ஓரளவு இன்றைய பிரச்சனைகளைப் பற்றி பேசியது. எமிலி-சின்னப்பாண்டி இலட்சிய இளைஞர்களாக தெரிந்தார்கள். அக்கதாப்பாத்திரம் நம்முள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லையென்றாலும் பிடித்திருந்தது என்பது உண்மை. கவிஞர் வைரமுத்து இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இந்நாவலை குறிஞ்சி மலர் அளவுக்கு கட்டமைத்திருக்க முடியும்.

  என் ஆசையெல்லாம் குறைந்தது வருடத்திற்கு ஒன்றாவது ‘குறிஞ்சி மலர்’ போன்ற நாவல்கள் வரவேண்டும். என் போன்ற இளைய சமுதாயம் வாசிக்க வேண்டும். அதன்தாக்கத்தால் தமிழ் சமூகத்தில் இலட்சிய இளைஞர்கள் உருவாக வேண்டும் என்பதே. இன்றைய காலகட்டத்தில் இதுபோன்ற நாவலை படைக்கும் ஆற்றல் மூன்று படைப்பாளர்களுக்கு உண்டு. தமிழருவி மணியன், S.p. Udayakumar , இறையன்பு இவர்களே அந்த மூன்று படைப்பாளர்கள் ஆவர். இன்னும் சொல்லப்போனால் இந்த மூவரும் மிகப்பெரிய நாவல் ஒன்றும் படைக்கவில்லைதான். ஆனால் இவர்களால் மட்டுமே குறிஞ்சி மலர் போன்று நம் மண்,பண்பாடு,இன்றைய உலகச்சூழல் ஆகியவற்றை உள்ளடக்கிய அற்புதநாவல்களை படைக்க முடியும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. இப்படைப்பாளர்களை சந்திக்கும் சந்தர்ப்பம் அமையும்போது நிச்சயம் என் கருத்தை வலியுறுத்துவேன்...

1 comment: