Saturday, May 18, 2013

தாய்மொழிவழிக்கல்வி-3


கல்விச்சாலை என்னும் சிறைச்சாலை!

  இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு இரண்டரை வயது ஆகிய உடனே Pre.K.G-யில் சேர்த்துவிடுகிறார்கள். அம்மா,அப்பாவின் கதகதப்பில் இருக்கவேண்டிய குழந்தைகள் இரண்டரைவயதிலேயே அவனை/அவளை பெரிய அறிவாளியாக்கித்தீருவேன் என்று கங்கணம்கட்டிக்கொண்டு குழந்தைகளை படுத்தும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. அம்மாவிடமும் அப்பாவிடமும் தாத்தா,பாட்டியிடமும் கொஞ்சிவிளையாடிமகிழவேண்டிய குழந்தைகள் கல்விக்கூடம் என்னும் சிறைச்சாலையில் மாட்டிக்கொண்டு தவியாய்தவிக்கிறார்கள். பெற்றோர்கள் குழந்தைகளை குழந்தைகளாய் இருக்கவிடுவதில்லை. இதுபோன்ற பெற்றோர்களைப்பார்த்து ஒரு கேள்விகேட்கவிரும்புகிறேன்: இரண்டரைவயது நிரம்பிய ஒருகுழந்தைக்கு கல்வி என்னவேண்டிக்கிடக்கிறது.? அவர்களுக்கு விளையாட்டல்லவா முக்கியம்.பெரும்பாலான மேலைநாடுகளில் குழந்தைகளை ஆறு வயதில்தான் பள்ளியில் சேர்க்கிறார்கள்.

  பெரும்பாலன பெற்றோர்கள் புலம்புவது அவன்/அவள் கேள்விமேல் கேள்விகேட்டு எங்க உயிர எடுக்கறான். இங்கு இருக்கிறதுக்கு பதிலா பள்ளிக்கூடம் போய்தொலையட்டும் என்பார்கள். குழந்தையென்றால் குழந்தையாகத்தான் இருக்கும். அங்குமிங்கு ஓடும்,அது என்ன?இது என்ன? என்று ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்கத்தான் செய்யும். அப்படியிருந்தால்தான் அது குழந்தையாக இருக்கிறது என்று அர்த்தம். அதைவிடுத்து, அதை தொடாதே, இதைதொடாதே என்று அவர்களை ஒன்றும் செய்யாமல் அமைதியாக உட்கார் என்றால் ஒருகுழந்தையால் எப்படி எதுவும் செய்யாமல் அமைதியாக உட்காரமுடியும்? சரி, நம்மையே எடுத்துக்கொள்வோம், நாமே ஒரு மணிநேரம் எந்த செயலும் செய்யாமல் சும்மா உட்கார்ந்து கொண்டியிருப்போமா? அப்படியிருந்தால் நமக்கே பைத்தியம் பிடித்துவிடுவதுபோல் இருக்கும். அப்படியிருக்கும்போது குழந்தைகளுக்கு?

  உங்கள் குழந்தைகளை தாத்தா,பாட்டியிடம்(அது பக்கத்துவீட்டு தாத்தா,பாட்டியாககூட இருக்கலாம்)விடுங்கள். நல்ல நீதிக்கதைகளை சொல்லிவளரப்பார்கள்.இப்படி வளரும் குழந்தைகள் நல்ல ஒழுக்கபண்புள்ள மனிதர்களாக பிற்காலத்தில் திகழ்வார்கள்.

  சரி,வீட்டில் பெற்றோர்தான் இப்படியென்றால் கான்வெண்ட்கள் பெற்றோர்களைவிட கொடுமையாக இருக்கிறது. இந்த பிஞ்சு குழந்தைகளை எப்படி வளர்க்கவேண்டும் என்று தெரிவதில்லை. இந்தவயதிலேயே ரேங்க் போட்டு அவர்களில் நீ அறிவாளி, நான் முட்டாள் என்று பேதத்தை உருவாக்குகிறார்கள்.

  உங்கள் நெஞ்சைத்தொட்டு சொல்லுங்கள், இன்று எத்தனை குழந்தைகள் நான் பள்ளிக்குப்போகிறேன் என்று அவர்களாகவே முன்வந்து மகிழ்ச்சியாக செல்கிறார்கள்? அந்தளவு நரகமாக உள்ளது நமது கல்விச்சாலைகள்.(ஒருசில விதிவிலக்கு பள்ளிக்கூடங்கள் உள்ளன என்பது ஆறுதல்தரும் விஷயம்).

  குழந்தைகளை விளையாடும்போது நீங்கள் கவனித்தால் ஒன்று தெரியும், அவர்கள் ஆசிரியர்,மாணவர்கள் விளையாட்டு விளையாடுவார்கள்.அதில் நான்தான் டீச்சரா இருப்பேன்னு சொல்லி ஓடிப்போய் கையில் ஒரு குச்சியை எடுத்துக்கொள்ளும். இதிலிருந்து என்ன தெரிகிறது ஆசிரியர் என்றாலே கையில் பிரம்புடன்தான், இருப்பார்கள், குழந்தைகளை அடிப்பார்கள் என்ற ஒரு பிம்பத்தை நமது பெரும்பாலான ஆசிரியர்கள் ஏற்படுத்திவைத்திருக்கிறார்கள்.

   இந்த சூழ்நிலைகளையெல்லாம் நாங்கள் கவனித்ததால்தான் நாங்கள் ஒருமுடிவெடுத்துள்ளோம் எங்கள் குழந்தைகளை ஆறு வயதில்தான் பள்ளிக்கு அனுப்புவதென்றும்,ஐந்தாம் வகுப்புவரையில்தான் பள்ளிக்கு அனுப்புவதென்றும், அதெற்கு மேல் நாங்கள் வீட்டிலேயே அவர்களை படிக்க வைக்கலாமென்றும் முடிவெடுத்துள்ளோம்.எங்களின் முடிவு உங்களுக்கு பைத்தியகரமானதாக இருக்கலாம். ஆனால் இதோ கீழே உள்ள தொடர்பில் சென்று படித்துப்பாருங்கள் ஒரு தகப்பன் எப்படி தன்குழந்தைகளை வள்ர்க்கிறார்? எப்படி வளர்க்கவேண்டுமென்பது உங்களுக்கே புரியும்.இதைப்படித்தபிறகு நிச்சயம் நீங்களும் எங்கள் வழியைப்பின்பற்றுவீர்கள்.

http://writersamas.blogspot.in/2010/11/45e.html

தமிழ் வழிக்கல்வி-2


  ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆங்கில வழியில்தான் படிக்கவேண்டுமென்பது உலகின் மிகப்பெரிய அபத்தம். அன்று பாரதிக்கு ஏழு மொழிகள் தெரியும், அதனால் பாரதி என்ன ஏழு மீடியத்திலுமா படித்திருப்பார். பாவாணர் அவர்களுக்கு என்பத்தி இரண்டு மொழி தெரியும், அதனால் பாவாணர் என்ன 82 மீடியத்திலுமா படித்திருப்பார்.

  இங்கு பெரும்பாலனவர்களுக்கு மொழிக்கும், அறிவுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. ஆங்கிலத்தை ஒருமொழியாக நினைக்காமல் அதை அறிவாக நினைக்கிறார்கள். அதனால்தான் ஆங்கிலத்தின் மீது இவ்வளவு மோகம்.அதுமட்டுமல்ல நம்பள்ளிகள் ஆங்கிலத்தை மொழியாக போதிக்காமல் அறிவாக போதிக்கிறார்கள்.

  ஒவ்வொரு மனிதனும் தன்வாழ்நாளில் எவ்வளவு மொழியைக்கற்றுக்கொள்கிறானோ அந்தளவிற்கு அவன் அறிவு விரிவடையும் என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படி கற்றுக்கொள்வதிலும் எந்த தவறுமில்லை.ஆனால் தன் தாய்மொழியை மறுதலித்துவிட்டு அயல்மொழியை கொண்டாடுவது வெட்கக்கேடானது.ஆகையால்தான் எங்கள் குழந்தைகளை தாய்மொழிவழிக்கல்வியில் பயிலவேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம்.

இன்னும் பேசுவேன்...

தமிழ் வழிக்கல்வி-1


   இன்று பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எந்த பள்ளியில் படிக்கவைக்கலாம் என்பதே பேச்சாக இருக்கிறது. கூலி வேலை செய்யும் பெற்றோர்கள்கூட எப்பாடுபட்டாவது தங்கள் குழந்தைகளை ஆங்கில வழியில் படிக்கவைக்க வேண்டும் என்பதாகவே இருக்கிறது. அதுவும் சமச்சீர் கல்வி வந்தவுடன் பெருநகரங்களில் சி.பி.எஸ்.ஸி-யில் படிக்கவைக்கலாமா என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

  இன்று என்னவருடன் எங்கள் எதிர்காலதிட்டங்களைப் பேசிக்கொண்டிருக்கும்போது நாங்கள் ஒரு முடிவு எடுத்தோம். வருங்காலத்தில் எங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்கவைக்கலாமென்றும் அதுவும் தமிழ்வழியிலேயே படிக்கவைக்கலாமென்றும் முடிவு எடுத்துள்ளோம். ஆம் இது ஏதோ உணர்ச்சி வயப்பட்டு எடுத்தமுடிவல்ல. நம்மைச்சுற்றி இருக்கும் குழந்தைகள் எந்த பள்ளியில் படித்தாலும், எந்த மீடியத்தில் படித்தாலும் நாம் நம் குழந்தைகளை கண்டிப்பாக தமிழ் வழியிலேயே படிக்க வைக்கவேண்டும் என் முடிவாக இருக்கிறோம்.

  காரணம் எந்த குழந்தையும் தன் தாய்வழியில் படிக்கும்போதே அவர்களின் புரிதல் மேனமையடைகின்றது. அவர்களின் பார்வை விசாலமடைகின்றன. தன்னம்பிக்கை அதிகரிக்கின்றன. இன்று பல சாதனையாளர்கள் தாய்மொழிவழியில் படித்தவர்கள்தான். குறிப்பாக சொல்லவேண்டுமானால் நமது அறிவியல் விஞ்ஞானி திரு.மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் தான் போகும் இடம்மெல்லாம் நான் தமிழ்வழியில் படித்ததால்தான் இந்த நிலையை அடைந்துள்ளேன். நான் சாதித்தமைக்கு என்தாய்மொழிவழி கல்வியே காரணம் என்று நம் தமிழ்மொழியின் பெருமையை பறைசாற்றுகிறார். கண்டிப்பாக நாங்களும் அப்படி ஒரு சாதனையாளர்களை உருவாக்கி காட்டுவோம்!.

இன்னும் இதைப்பற்றி தொடர்ந்துபேசுவேன்...

Saturday, May 11, 2013

மனிப்பூரில் ஒரு சகாயம்!


            நாம் கற்ற கல்வியால் இந்த மானுடத்திற்கு பயன் இருக்குமேயானால் அதுதான் சரியான கல்வி. ஆனால் இங்கு பெரும்பாலும் நம் வயித்துபாட்டுக்காகவே படிக்கிறோம். அதுபோல ஒருவர் ஒருபதவியில் இருக்கிறார் என்றால் அந்த பதவியினால் அந்த சமூகத்திற்கும்,எளிய மனிதர்களுக்கும் பயன் இருக்குமேயானால் அப்பொழுதுதான் அந்தப்பதவிக்கும்,அப்பதவில் இருப்பவர்க்கும் பெருமை.ஆனால் இன்று பெரும்பாலான ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ் அதிகாரிகள் தன் பதவியை தக்கவைத்துக்கொள்வதற்கு அரசியல்வாதிகளின் முதுகைச்சொறிந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு மத்தியிலும் ஒரு சிலர் மக்கள் நலனுக்காக உழைப்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

   தமிழ்நாட்டில் எத்தனையோ ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள், ஆனால் நம் நினைவிற்கு வருபவர்கள் சகாயம்,இறையன்பு,அன்சுல் மிஸ்ரா என்று ஒருசிலரே.காரணம் இவர்கள் அந்தப்பதவியில் அமர்ந்தப்பிறகு அவர்கள் மக்களுக்காகச் செய்த சேவைதான் அவர்களை நம் நினைவில் நிற்கச்செய்கின்றது.

    சில மாதங்களுக்கு முன்னால் ஒரு sociologist சொன்ன கருத்தை நான் முழுமையாக மறுக்கிறேன். அதாவது அடிமட்டத்திலிருந்து(SC/St போன்றோர்)உயர் பதவிக்கு வருபவர்கள்தான் பெரும்பாலும் லஞ்சத்தில் ஈடுபடுகிறார்கள் என்றார். இந்தியா முழுக்கவே அவருக்கு எதிராக பலத்த கண்டனங்கள் எழுந்தன. ஆனால் RBI(Reserve Bank of India)யின் துணைகவர்னர் திரு.சக்கரவர்த்தி அவர்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னால் சொன்ன ஒரு கருத்தை இங்கு பதிவு செய்கிறேன். அதாவது பெரிய பதவிகளுக்கெல்லாம் பெரும்பாலும் அடித்தட்டிலிருந்து படித்துவிட்டு வருபவர்களை அமர்த்த வேண்டும், அப்பொழுதுதான் அவர்களின் பிரச்சனைக்கு ஏற்ப அவர்களால் திட்டங்களை வகுக்க முடியும் என்றார். இதை நான் முழுமையாக ஆமோதிக்கிறேன். இவரின் கூற்றுக்கு உதாரணங்கள்தான் இறையன்பு,சகாயம் இன்னும் இன்னும் சிலர் இருக்கிறார்கள். 

    அந்த வகையில் சமீபத்திய ஓர் உதாரணம் Armstrong Pame I.A.S.(28). இவர் ஏழு சகோதரிகள்(Seven Sisters) என்று வருணிக்கக்கூடிய வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மனிப்பூர் மாநிலத்தின், Tousem பகுதியில் Sub-divisional magistrate பதவியில் இருக்கும் இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி. அதோடுமில்லாமல் நாகலாந்து மாநிலத்தின் Zeme என்னும் மலைவாழ் இனத்திலிருந்து வந்திருக்கும் முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரியும்கூட.

      நமது அரசாங்கம் செய்திருக்க வேண்டிய செயலை தனிமனிதனாக(மக்கள் ஒத்துழைப்புடன்)சாதித்திருக்கிறார்.இவரை அந்த பகுதி மக்கள் ’அதிசய மனிதன்’ என்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.அப்படி என்னதான் சாதித்துவிட்டார் இவர் என்று கேட்கிறீர்களா? ஆம், மக்களுக்கு நல்ல சாலை வசதியை ஏற்படுத்திகொடுத்திருக்கிறார். இவர் அந்த திட்டத்திற்கு’’மக்கள் பாதை’’(People's Road) என்றும் பெயர் சூட்டியிருக்கிறார். அட!? ரோடுபோட்டதுலாம் ஒரு சாதனையா? எங்க ஊர் பஞ்சாயத்து தலைவர், கவுன்சிலர்கூடதான் எங்களுக்கு ரோடுபோட்டுகொடுத்திருக்கிறார்கள் என்று அங்கலாய்க்காதீர்கள். நம்ம ஊர் பஞ்சாயத்து தலைவர்கள் போடுவது மக்களுக்காக அல்ல, தங்களின் வசதிவாய்ப்பை பெருக்கிக்கொள்வதற்காக. ஆனால் Armstrong Pame I.A.S. செய்துகொடுத்திருக்கும் சாலைவசதி மலைவாழ் மக்களுக்காக.அதுவும் மிகமிகக் கடினமான மலைப்பகுதியில்.

     2012ஆம் ஆண்டு Tousem மாவட்டத்தின் Sub-divisional magistrate பதவிக்கு வந்தபிறகு பல கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து அம்மக்களின் வாழ்க்கை முறையினைப் பார்த்திருக்கிறார். அம்மக்கள் அரிசி வாங்கி முதுகில் சுமந்துகொண்டு பலகிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டிய சூழல், ஒரு நோயாளியை மருத்துவமணைக்கு அழைத்துச்செல்ல வேண்டுமானால்கூட மூங்கிலாலான ஒரு தட்டியில்தான் தூக்கிக்கொண்டு செல்லவேண்டும். இதுபோன்ற மிகக்கடுமையான சூழ்நிலையை பார்த்த அவர் உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அப்பகுதி மக்கள் ஒரே குரலாக எங்களுக்கு நல்ல சாலைவசதி வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். சரி என்று இந்த விஷயத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். அரசோ அங்கு சாலைபோடுவதற்கான சூழ்நிலை துளிகூட இல்லையென்று கூறி சாலைபோட மறுத்துவிட்டது. இருந்தும் இவர் சோர்ந்து போய்விடவில்லை. தனது சொந்த பணம் ஐந்து லட்சத்தை முதல்முதலாக இந்த திட்டத்திற்கு ஒதுக்கியிருக்கிறார். அவரது சகோதரர்(டெல்லி பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்) ரூபாய் ஒருலட்சமும், அவரது அம்மா (இவரின் அப்பா ஓய்வூதியத்திலிருந்து) ஐயாயிரமும் கொடுத்திருக்கிறார்கள். இந்த தகவலை அப்படியே அவருடைய முகனூலில் போட்டிருக்கிறார். இதைப்பார்த்துவிட்டு அமெரிக்காவிலிருந்து ஒருவர் 2500 டாலரும்,மற்றொருவர்3000டாலரும் கொடுத்திருக்கிறார்கள். இப்படியாக 40லட்சம் சேர்ந்திருக்கிறது. இருந்தும் இந்த 40லட்சம் மிகச்சிறிய தொகையாகவே இருந்திருக்கிறது. சாலைபோடும் உள்ளூர் Contractors சில இயந்திரங்களை இலவசமாக கொடுத்து உதவியிருக்கிறார்கள். அந்தப் பகுதிமக்களும் கூலிவாங்காமல் வேலைசெய்திருக்கிறார்கள். இப்படியாக அந்தபகுதி மக்களுக்கு 100கிலோமீட்டர் அளவுக்கு சாலை அமைத்துகொடுத்திருக்கிறார்.

     ’உண்மையில் இதை என்னால் நம்பவே முடியவில்லை, இது ஒரு அதிசயம், மீண்டும் என்னால் இப்படி ஒருசெயலை செய்ய முடியுமா என்று தெரியவில்லை’ என்று நெகிழ்கிறார் திரு.Armstrong Pame I.A.S.

      அந்தப் பகுதிவிவசாயிகளும் இந்த ’மக்கள் சாலை’ வந்தபிறகு எங்களாலும் நாலுகாசு சம்பாதிக்கமுடிகிறது என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.

     ’ரோடுபோட்டது போதும் முதலில் உனக்குன்னு ஒரு வீடு கட்டு’ என்று இவரின் அம்மா கூறுகிறாராம்... 

    நான் எத்தனைமுறை வேண்டுமானாலும் உரக்கச் சொல்வேன் மகத்தான சாதனைகளும், மக்களுக்கான பயனுள்ள திட்டங்களும் இதுபோன்ற எளிய மனிதர்களாலேயே சாத்தியமாகின்றன.

Monday, April 1, 2013

60 லட்சாதிபதிகளின் கிராமம்!


என்னவனுடைய லட்சிய கிராமத்தை சொல்லும்போது சிலிர்த்துப்போனேன். இந்த செயல்களை நீதான் முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்னும்போது அப்படியே பயந்து பத்தடி தூரம் தள்ளிச்சென்றேன். பிறகு என்னவன் என்னிடம் நம்முடைய கிராமத்தை எப்படி முன்மாதிரி கிராமமாக மாற்றவேண்டும் என்று கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச்சொல்லி அதற்கு உன்னை முழுமையாக தயார்படுத்திக்கொள்ள வேண்டுமென்று சில முன்மாதிரி கிராமங்களின் வரலாற்றைப் படிக்க கொடுத்தார். பிறகு உள்ளுவதெல்லாம் உயர் உள்ளல் என்னும் வள்ளுவனின் கூற்றுப்படி என்னை நான் தயார்படுத்திக்கொண்டிருக்கிறேன். கூடுதலாக இன்று தினமணி கொண்டாட்டம் பகுதியில் வந்த கீழ்கண்ட கட்டுரை என் லட்சியத்திற்கு உரம் சேர்க்கிறது. நிற்க!

இந்தியா கிராமங்களில் வாழ்கிறது, இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள். மகாத்மா சொன்னார்,அவர் சொன்னார்,இவர் சொன்னார் என்று புளுத்துப்போன பழைய வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருக்காமல் ஒருமுன்மாதிரி கிராமத்தை உருவாக்க நினைப்பவரா நீங்கள்? இல்லை  அதுபோன்ற அற்புதமான கிராமத்தில் வாழவேண்டுமென்று ஆசைப்படுபவரா நீங்கள்? அப்படியென்றால் அவசியம் இக்கட்டுரையினைப் படியுங்கள்...


வானம் பார்த்த பூமி, நிலத்தடி நீர் குறைந்து கொண்டே போதல், விவசாயம் செய்வதற்காக வாங்கிய கடனுக்கான வட்டி குட்டி போட்டு போட்டு குடும்பம் குடும்பமாக ஊரைவிட்டே இடம்பெயர்ந்த அவலம், விவசாயிகளின் தற்கொலை என மகாராஷ்டிர மாநிலம் விதார்பாவிலும் இந்திய கிராமங்கள் பலவற்றிலும் நடந்தவை மகாராஷ்டிர மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தின் ஹைவாரே பஜார் கிராமத்தில் நடக்காமல் காப்பாற்றப்பட்டிருக்கிறது. காப்பாற்றியிருப்பவர் ஒரு தனி நபர். அவரின் பெயர் போப்பட் ராவ் பவார்.

"விவசாயிகளின் தற்கொலை' தவிர முதல் பாராவில் நீங்கள் படித்த எல்லா விஷயங்களும் ஹைவாரே பஜார் கிராமத்திலும் அரங்கேறின. பல குடும்பங்கள் கிராமத்தைவிட்டு வெளியேறின. விவசாயிகள் மிகக் குறைந்த கூலிக்கு வெவ்வேறு வேலைகளைச் செய்யத் தொடங்கினர். இயற்கை பொய்த்தது பாதி என்றால் ஊருக்குள் மதுவின் பிடியிலும் இளைஞர்கள் தடுமாறிக் கொண்டிருந்தனர். "குடி' அதைக் குடிப்பவர்களின் குடியை மட்டுமில்லாமல், அடுத்தவர்களின் குடியையும் வன்முறை, அடிதடி கலாசாரத்தால் சீரழித்துக் கொண்டிருந்தது. கிராமத்தின் சுற்றுச்சூழல் பலவிதங்களிலும் கெட்டுக் கொண்டிருந்தது. இதுதான் 1995-க்கு முந்தைய ஹைவாரே பஜார்.

கிராமத்தின் வறட்சியைப் போக்க சில வழிகளை மக்களின் முன்வைத்தார் பவார். பல சீர்திருத்தங்களுக்கு மக்களை உட்படுத்தினார். அதில் முதன்மையான சீர்திருத்தம் மது விலக்கை முழுமையாக கிராமத்தில் கொண்டுவந்தது. அதோடு புகையிலை மற்றும் குட்கா, பான்பராக் போன்ற போதை வடிவங்களுக்கும் முற்றிலும் தடையைக் கொண்டுவந்தார். இந்த மாற்றங்களோடு, மக்கள் சக்தியின் ஒருங்கிணைப்போடு கிராமம் முழுவதும் சிறுசிறு குளங்களை வெட்டினார். இதனால் மழைக்காலத்தில் பெய்யும் மழை நீர் வீணாகாமல் சேமிக்கப்பட்டது. (ஒன்றல்ல இரண்டல்ல 52 மண் அணைகளையும் இரண்டு நீர் தொட்டிகளையும் 32 கல் அணைகளையும், 9 சின்ன வாய்க்கால்களையும் உருவாக்கினர்.) இவையெல்லாமே அரசுப் பணத்திலிருந்துதான் முறையாகக் கட்டப்பட்டிருக்கின்றன.

போப்பட் ராவ் பவாரின் தலைமையில் ஹைவாரே மக்களின் விடாமுயற்சி அந்த கிராமத்து மண்ணில் விஸ்வரூப வெற்றியைக் கொடுத்திருக்கின்றது. 1995-ல் 80-125 அடி ஆழத்திற்கு தோண்டினால்தான் கிணற்றில் தண்ணீர் வரும். தற்போது 15-40 அடி ஆழத்திலேயே தண்ணீர் கிடைக்கிறது. இதற்கு அடிப்படையே நிலத்தடி நீர்மட்டத்தை படிப்படியாக குளங்களின் மூலமாகவும் அணைகளின் மூலமாகவும் உயர்த்தியதுதான். இதே மாவட்டத்தில் இருக்கும் பக்கத்து கிராமங்களில் 200 அடிக்குக் கீழேதான் இன்றைக்கும் தண்ணீர் கிடைக்கிறது.

மண்ணை வளப்படுத்த வேண்டுமானால் இயற்கை உரத்துடன் கூடிய பாரம்பரியமான விவசாயமே சிறந்தது என்னும் முடிவுக்கு வந்த பவார், நிலத்தடி நீரை சேமிக்க குளங்களை வெட்டியதுபோலவே, கிராமத்தில் கறவை மாடுகளின் எண்ணிக்கையைப் பெருக்கும் யோசனையையும் மக்கள்முன் வைத்திருக்கிறார். அதற்கும் கிராம மக்களின் பரிபூரண ஒத்துழைப்பு கிடைத்திருக்கின்றது. 1995-ல் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 150 லிட்டர் வரைமட்டுமே பால் உற்பத்தி இருந்தது. தற்போது ஒருநாளைக்கு 4 ஆயிரம் லிட்டருக்கும் மேல் பால் உற்பத்தி இந்த கிராமத்தில்
நடைபெறுகிறது.

இருபதாண்டுகளுக்கு முன்பு வறட்சிக்கும் பஞ்சத்திற்கும் ஆளான கிராமத்திலிருந்து வெளியேறிய குடும்பங்கள் மீண்டும் அதே கிராமத்திற்கே திரும்பி தங்களின் பாரம்பரியமான விவசாயத் தொழிலில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

அந்த கிராமத்தில் இருப்பவரின் தனி மனித வருமானம் மாதத்திற்கு 30 ஆயிரத்திற்கு மேல் உயர்ந்திருக்கிறது. இந்த கிராமத்தில் இருக்கும் 235 வீடுகளில் இருக்கும் தனிநபர்களின் எண்ணிக்கை சராசரியாக 1,250-க்கு மேல் இருக்கும். இவர்களில் 60 நபர்களின் சொத்துமதிப்பு 10 லட்சத்தைத் (1 மில்லியன்) தாண்டுமாம். உழைப்பால் தங்களையும் உயர்த்திக் கொண்டு நாட்டையும் உயர்த்தியிருக்கின்றனர் ஹைவாரே பஜார் கிராமத்தினர். இன்றைக்கு ஹைவாரே பஜார் கிராமத்தில் மகிழ்ச்சி அலை அடித்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு பவார் என்னும் தனி மனிதரின் பொதுவழியை அந்தக் கிராமமே பின்பற்றியதுதான் காரணம்.

நன்றி-தினமணி

Friday, December 7, 2012

கிராமங்களை நோக்கி திரும்புவோம்...




   இக்கட்டுரைக்குள் நுழைவதற்குமுன் முதலில் விவசாயத்திற்கும் எனக்குமான தொடர்பை நான் உங்களுக்கு தெரியபடுத்த விரும்புகிறேன். நான் முழு நேரம் விவசாயம் பார்ப்பவள் இல்லையென்றாலும் என் பாட்டி வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம் விவசாயத்தில் ஈடுபடத்தவறியதில்லை. அங்குள்ள விவசாயிகளின் பிரச்சனைகளையும் ஓரளவு அறிந்தவள். இப்பொழுதும் எங்களுக்குள்ள எட்டு ஏக்கர் நிலத்தில் அவ்வப்போது நான் பகுதி நேர விவசாயம் செய்து வருகிறேன். தொடர்ந்து விவசாயம் தொடர்பான புத்தகங்களைப் படித்து வருகிறேன். அத்துடன் இல்லாமல் என் விவசாயம் சார்ந்த  நண்பர்களின் ஆலோசனைகளையும் அவர்கள் கூறிய கருத்துக்களையும் இதில் எழுதி உள்ளேன். அதே போல் விவசாயம் எப்படி இருக்க வேண்டும்? என்னவெல்லாம் செய்தால் விவசாயத்தின் மூலம் நிறைய சம்பாதிக்க முடியும் என்று தொடர்ந்து சிந்தித்துக்கொண்டு வருகிறேன். என்னுடைய நோக்கம் அனைத்து கிராமங்களையும் சுயசார்புடைய கிராமங்களாக உருவாக்க வேண்டும்.அதாவது நகரத்தை நோக்கி ஓடாமல் நம் கிராமத்தில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி நகரத்தில் உள்ள வசதிகள் அனைத்தும் ஒவ்வொரு கிராமமும் பெறவேண்டும். நல்ல பசுமையான கிராமத்தை கட்டமைக்க வேண்டும் என்பதே என் நோக்கம். அதுமட்டுமில்லாமல் எதிர்காலத்தில் முழு நேர விவசாயத்தில் ஈடுபடவும் இருக்கிறேன். ஆகையால் நான் ஏதோ போகிறபோக்கில் இக்கட்டுரை எழுதவில்லை என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.


    இனி கட்டுரைக்குள் செல்வோம்.இது விவசாய நாடு,இந்தியா கிராமத்தில் வாழ்கிறது,கிராமம்தான் இந்தியாவின் முதுகெலும்பு என்றார் மகாத்மா காந்தியடிகள் என்ற பழைய பல்லவியே நானும் பாட விரும்பவில்லை. மனிதன் சக்கரத்தைக் கண்டுபிடித்ததிலிருந்து அவன் கொஞ்சம் கொஞ்சமாக நெருப்பைக் கண்டு பிடித்து சமைத்து உண்ணத் தொடங்கியதிலிருந்து இன்று நாம் அடைந்துள்ள நாகரிக வளர்ச்சிக்கு அடிப்படையாய் அமைந்தது விவசாயம்தான்.முதலில் விவசாயத்தை அறிமுகப்படுத்தியவள் ஒரு பெண்தான்.ஆம்  முதலில் ஆணும் பெண்ணும் உணவுக்காக வேட்டையாட இருவரும் சேர்ந்தே சென்றனர். ஒரு கட்டத்தில் ஆண் மட்டும் வேட்டையாட கிளம்பினான்.பிறகு தனிமையில் இருந்த பெண் சும்மா இருக்க பிடிக்காமல் விதை போல் இருந்த ஒன்றை பூமியில் ஊன்றிவைத்தால்,ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குப்பிறகு அது விளைந்து நின்றது.இப்படித்தான் விவசாயத்தை பெண் நமக்கு அறிமுகப்படுத்தினால். பிறகு மனித நாகரிகம் வளர்ச்சி அடைந்தது எல்லாமே ஆத்தங்கரை ஓரத்தில்தான்.காரணம் பயிர் செய்வதற்கு ஏதுவான நீரும் நல்ல மண்வளமும்  இங்கு அமைந்ததால். ஆகையால் நகரங்கள் ஆற்றங்கரையோரமே அமைந்தன. இப்படி மனித சமுதாயம் நாகரிக வளர்ச்சி அடைந்ததற்கு காரணமே விவசாயம்தான்.

  ஆனால் இன்று இந்த விவசாயமும் விவசாயிகளின் நிலையும் எந்த அவலட்சனத்தில் உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த கசப்பான உண்மை. இந்த தேசத்தில்தான் வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகள் தற்கொலைக்கு  தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். உழைக்கும் வர்கம் காலங்காலமாக உழைத்துக்கொண்டும் முதலாளி வர்கம் பாடுபடாமல் சொகுசான மகிழுந்தில் பயனித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.நான் இங்கு அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று கம்யூனிசம் பேச வரவில்லை.ஆனால் அனைவருக்கும் உயிர் வாழ்வதற்கான அடிப்படைத்தேவைகள் வேண்டும் என்றே கேட்கின்றேன்.

    தேசத்தின் நான்காவது தூண் ஊடகம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே.ஆனால் இன்றைய ஊடகங்கள் கொஞ்சம் கூட ஊடக தர்மம் இல்லாமல் செயல் படுகின்றன.’’எழுத்தும் தெய்வம்,எழுதுகோல் தெயவம்’’ என்றானே மகாக்கவி பாரதி அதை மறந்து ஊடகங்கள் செயல்படும் விதம் மிகக் கேவலமாக உள்ளது.சினிமாவையும் கிரிகெட் போன்ற கேளிக்கையான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த ஊடகங்கள் நூற்றிருபது கோடிப்பேருக்கு சோறுபோடும் விவசாயிகளைப் பற்றி கொஞ்சளவேனும்  எழுதுகிறார்களா?பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியை அனைத்து மீடியாக்களும் போக்கஸ் செய்து கொண்டிருந்த அதேவேலையில் ,அதற்கு பக்கத்திலேயே விதர்பா பகுதியில் விவசாயத்தற்கொலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.அதை ஒரு ஊடகமும் கண்டுக்கொள்ளவில்லை. அந்த அவல நிலை குறித்து ஒரு ஊடகமும் எழுதவில்லை. ஏதோ ஒரு பக்கத்தில் பெட்டி செய்தியாக போட்டுவிட்டு போகிறார்கள். ‘விவசாயம் நிறைந்த ஒரு நாட்டில் வறுமை சூழ்ந்த ஒரு நாட்டில் சினிமாவும்,கிரிக்கெட்டும் தேவையா (இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமா)’என்று நான் கேட்கவில்லை,உச்சநீதிமன்ற முன்னால் நீதிபதி, இப்போதைய Press Council of India Chairman உயர்திரு.மார்கண்டேய கட்ஜு அவர்கள் கேட்கிறார்.மீடியா சீர்திருத்தம் அவசியம் கொண்டுவர வேண்டும் என்று கூறுகிறார்.

 
    தமிழனின் உழைப்பை பறைசாற்றும் உழவர்திரு நாளாம் பொங்கல் நாளன்றுகூட நம் வீட்டு டி.வி பெட்டியிலும் செய்திதாள்களிலும் சினிமாகாரர்கள்தானே ஆக்கிரமிக்கிரார்கள்.அனுஷ்காவின் அன்றாட நாட்குறிப்பு தொடங்கி இந்த பொங்கலுக்காவது ரஜினி படம் வருமா வராதா?என்று சினிமாகாரர்களை போட்டுபோட்டே நம்மை சிந்திக்க வைக்கவிடுவதில்லை இந்த தொலைக்காட்சியும் பத்திரிக்கைகளும். நம் விவசாயிகளின் தினத்தில் ஏன் இவர்கள் வந்து நம்மை ஆக்கிரமிப்பது. இந்த தினத்தில்  ஒரு விவசாயியையாவது அழைத்து வந்து அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று கூட தோன்ற வில்லையா நம் ஊடகங்களுக்கு.இதில் மக்கள் தொலைக்காட்சி மட்டுமே விவசாய சார்ந்த நிகழ்ச்சி ஒளிபரப்புகிறது. பொதிகை கொஞ்சம் பங்கு கொள்கிறது.

  இங்கு இருபத்தி நான்குமணி நேரத்திற்கும் காமெடிக்கு என்று பல சேனல்கள், பாடல்களுக்கு என்று பல சேனல்கள், விளையாட்டுக்கு என்று பல சேனல்கள். ஆனால் எழுபது சதவீதம் பேர் வேலை செய்யும் விவசாயத்திற்கென்று ஒரு சேனல்கள் உண்டா? ஏன் இந்த அவலநிலை? இந்த தேசம் சரியான பாதையில் பயணிக்கின்றதா?

 ஊடகம்தான் இப்படி என்றால் நம்மால் நமக்காக தேர்ந்தெடுத்த அரசும் அரசியல் வாதிகளும் ஊடகங்களைவிட மோசமாக செயல்படுகிறார்கள்.விவசாயமே துளிகூட தெரிந்திடாத கொஞ்சம் கூட வியர்வை சிந்தி உழைக்காத ஒருவர்தான் இங்கு விவசாயத்துறை அமைச்சராக இருக்கும் அவல நிலை.இவர் எப்படி நமக்கு ஏற்ற சட்டங்கள் போடுவார்?விவசாயிகளின் பிரச்சனை இவருக்கு எப்படி தெரியும்?இதுவரை ஒரு விவசாயி கூட ஒரு ராஜசபா எம்.பியாக தேர்ந்தெடுக்கவில்லை.அதற்குள் சச்சின் இடம் பிடித்துவிட்டாரே. இப்பொழுது அவருக்கு பாரத ரத்னா கொடுத்தே ஆக வேண்டும் என்று அரசியல் நடந்து கொண்டிருக்க நம் இளைஞர்கள் சிலர் இதற்கு வக்காலத்து வாங்குவது மிகப்பெரிய கொடுமை.

இன்றைய பெரும்பாலான இளைய சமுதாயத்தினர் டாஸ்மாக், சினிமா, கிரிகெட் என்று இந்த வட்டத்திற்குள்ளே சுழலுகின்றனர்.கேட்டால் தினமும் உழைக்கின்றோம் ஒருநாள் ஓய்வு என்கிறார்கள். நான் இவர்களைப்பார்த்து தெரிந்தே ஒரு கேள்வி கேட்கிறேன்.நீங்கள் வாழும் இதே சமூகத்தில்தானே  சினிமாவே கண்டிராத எத்தனையோ பேர் இன்னும் நமக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஒரு வேலை உணவில்லாமல் பசியால் தினம்தினம் செத்துக் கொண்டிருக்கிறார்கள். வளர்ந்துவிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு கேளிக்கைகள் தேவைப்படலாம்.ஆனால் பட்டினிச்சாவு நடந்து கொண்டிருக்கும் நம் சமுகத்திற்கு தேவையானதா என்ற கேள்வியை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

   இப்படியாக எங்கெங்கு காணினும் விவசாயி நசுக்கப் பட்டுக்கொண்டிருக்கிறான்.விவசாய குடும்பத்திலிருந்து வந்த நம் வீட்டு படித்த இளைஞர்கள் நகரத்தில் தகுதிக்கு குறைவான சம்பளத்தில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எனக்குத்தெரிந்த பொறியியல் படித்த எத்தனையோ இளைஞர்கள் பத்தாம் வகுப்பு படித்து செய்யக் கூடிய ஒரு வேலையை செய்து கொண்டிருக்கிறார்ள்.அப்படியென்றால் விவசாயக் குடும்பத்திலிருந்து பொறியியயல் படித்துவிட்டு நம் இளைஞர்கள்/இளைஞிகள் தனியார் நிறுவனத்திற்கு சென்று வேலை பார்க்கக் கூடாதா?அப்படியென்றால் அவர்கள் பெற்றோர்கள் செய்த விவசாயத்தையே இவர்களும் செய்ய வேண்டுமா? இது குலத்தொழில் போலல்லவா இருக்கிறது என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது.

  இவ்வளவு அவலநிலைகளுக்கு மத்தியிலும் விவசாயம் செய்துகொண்டிருக்கும் நம் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகள் மிகக கொடுமையானது.முதலில் சரியான மின்சாரம் இல்லை, விவசாய கூலி வேலைக்கு ஆட்கள் வருவதில்லை,அதையும் மீறி இராப்பகல் பாரமல் பயிர்செய்து உற்பத்தி செய்துகொண்டு போனால் நியாயமான விலைக்கு கேட்பதில்லை.இது போன்ற இல்லைகளே அதிகம்.

  சரி அனைவரும் புறந்தள்ளும் விவசாயத்தில், இவ்வளவு பிரச்சனைகள் சூழ்ந்துள்ள விவசாயத்தில் எப்படிதான் லாபகரமான விவசாயியாக உருவெடுப்பது? இதற்கு நம் இளைஞர்கள்/இளைஞிகள் என்ன செய்ய வேண்டும்? சுயசார்புடைய கிராமங்களை உருவாக்குவது எப்படி?

தொடரும்...

Tuesday, December 4, 2012

தொடர் : இலக்கிய ஆளுமைகள்-2

தமிழ்ச் சிறுகதையின் தந்தை "புதுமைப்பித்தன்'

-மு.பரமசிவம்



  மனிதன்! என்ன கம்பீரமான வார்த்தை!'' என்றார் இலக்கிய மேதை மாக்சிம் கார்க்கி.

 ""வேறுள குழுவையெல்லாம் மானுடம் வென்றதம்மா!'' என்றார் கம்பர்.

 ""மனிதன், அவன் ஒரு புழு!'' என்றார் புதுமைப்பித்தன். அதுதான் அவர் வாழ்க்கையில் கண்ட விரக்தி, வேதனை, சகிப்புத்தன்மை எல்லாம் அவரை அப்படிப் பேசவைத்தது.

 ÷கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில் 1906-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி சொக்கலிங்கம்-பர்வதம்மாள் தம்பதிக்குப் பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் விருத்தாசலம்.

 ÷தொடக்கக் கல்வியை செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் பயின்றார். தாசில்தாராகப் பணிபுரிந்த அவருடைய தந்தை ஓய்வு பெற்றதால், 1918-இல் அவரது சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்ப நேர்ந்தது. அங்குள்ள ஆர்ச் யோவான் பள்ளியில் தொடக்கக் கல்வியை முடித்தார். 6 வயதிலேயே தாயை இழந்தார்.

 ÷÷பின்னர், நெல்லை இந்துக் கல்லூரியில் இளங்கலை (பி.ஏ.,) பட்டம் பெற்று, பாரதி அன்பர் வ.ரா.வின் உதவியுடன் பத்திரிகை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். 1933 முதல் ஊழியன், சுதந்திரச் சங்கு, தினமணி, தினசரி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். புதுமைப்பித்தன் தன் பெயருக்கு ஏற்ப, பலர் நடந்து - நைந்துபோன பாதையில் போகாமல், புதிய பாதையில் புதிய சிந்தனையில் சோதனை முயற்சியில் கதைகளைப் படைத்தார்.

 ÷உலக இலக்கியங்களைத் தேடிப்பிடித்துப் படிப்பதில் வல்லவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரைகள், விமர்சனம், ஓரங்க நாடகம், மொழிபெயர்ப்பு நூல்கள் எனப் பல படைப்புகளை வழங்கியுள்ளார். புதுமைப்பித்தனின் தனித்தன்மை என்றவுடன் படிப்பவர் மனதில் பளிச்செனத் தோன்றுவது அவரது நடைச்சிறப்புதான். அவருடைய கதைகளைத் திரும்பத் திரும்பப் படித்தாலும் சலிப்பு ஏற்படாததற்குக் காரணம் அவருடைய நடை ஆளுமைதான்.

 ÷நடை வேறுபாடுகளில் பல்வேறு சோதனைகளைச் செய்து பார்த்தவர் புதுமைப்பித்தன். ""கருத்தின் வேகத்தையே பிரதானமாக்கிக் கொண்டு வார்த்தைகளை வெறும் தொடர்பு சாதனமாக மட்டும் கொண்டு, தாவித்தாவிச் செல்லும் நடை ஒன்றை நான் அமைத்தேன். அது நானாக எனக்கு வகுத்துக்கொண்ட ஒரு பாதை. அது தமிழ்ப் பண்புக்கு முற்றிலும் புதிது'' என்று புதுமைப்பித்தன் கூறியுள்ளார்.÷

 ÷""எடுத்துக்கொண்ட ஒரு விஷயத்தை உயிரோடு, உணர்ச்சியோடு பிரதிபலிக்கும் ஆற்றல் வாய்ந்த நடை, கையாளும் நடையின் பெருமிதத்துக்கு ஏற்ப மிக ஆழ்ந்த விஷயம்; கதையின் உருவமும் பூரணத்துவம் பெற்றது. உருவமும் கதைப்போக்கும் தனித்தன்மை பெற்றவை'' என்று புதுமைப்பித்தன் கதைகளைப் பற்றி கு.அழகிரிசாமி குறிப்பிட்டுள்ளார்.

 ÷1933-இல் இவருடைய முதல் படைப்பான "குலோப்ஜான் காதல்' காந்தி இதழில் வெளிவந்தது. 1934-இல் இருந்து மணிக்கொடியில் இவரது படைப்புகள் பிரசுரமாகத் தொடங்கின. மணிக்கொடியில் வெளிவந்த முதல் சிறுகதை "ஆற்றங்கரைப் பிள்ளையார்'.

 ÷இவரது நூல்கள், புதுமைப்பித்தன் சிறுகதைகள், புதிய ஒளி, காஞ்சனா, அன்று இரவு, ஆண்மை, விபரீத ஆசை, சித்தி முதலிய ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இவரது அனைத்து சிறுகதைகளும் ஒரே தொகுப்பாக வெளிவந்துள்ளது. புதுமைப்பித்தன் பிறமொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்த்த பல கதைகள் தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளன. "உலகத்துச் சிறுகதைகள்' என்ற நூலில், ரஷ்யா, நார்வே, ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹாலந்து, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய பல்வேறு நாடுகளின், மொழிகளின் சிறந்த படைப்பாளிகளின் சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.

 பதினைந்து ஆண்டுகளே எழுத்துலகில் இருந்த புதுமைப்பித்தன், தமிழில் தரமான சிறுகதைகளைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார். தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் புதுமைப்பித்தன் சிறுகதை இலக்கியத் தகுதி பெற்றுத்தந்த கதைகள் பலவற்றை எழுதியுள்ளார். புதுப்புது உத்திகளும் தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் நடைநயமும் அவரது சிறுகதைகளில் கலந்துள்ளன. தமிழ் நடைக்குப் புது வேகமும் புது அழகும் சேர்த்தவர். கிண்டலும் நையாண்டியும் நிறைந்த இவரது சிறுகதைகள் சோகத்தை அடிநாதமாகக் கொண்டு வாழ்க்கையின் உண்மைகளை உள்ளது உள்ளபடி காட்டின. அந்த அளவுக்குத் தரமான கதைகளைத் தந்தவர். குறிப்பாக, துன்பக்கேணி, நாசக்காரக் கும்பல், மனித இயந்திரம், பொன்னகரம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் போன்ற கதைகளைச் சொல்லலாம்.

 ÷"பொன்னகரம்' கதையில் வரும் அம்மாளு கணவனுக்கு கஞ்சி காய்ச்சிக் கொடுக்க, தன் கற்பை விலைபேசினாள் என்பது கதையின் கருத்து. இப்படிக் கருத்து மோதல் கதைகளையும், பிரச்னைகளை எழுப்பும் கதைகளையும் எழுதியது போலவே, "தினமணி'யில் "ரசமட்டம்' என்கிற பெயரில் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளை எழுதி சிலரது மனதைப் புண்படுத்தியும், சிலரது மனதைப் பண்படுத்தியும் இருக்கிறார்.

 ÷ஒரு காலகட்டத்தில் புதுமைப்பித்தனின் பேனா, கூர்மைமிக்க போர்வாளாக இலக்கிய உலகில் சுழன்று சுழன்று வீசியிருக்கிறது. புதுமைப்பித்தன் ஒரு சமூக சிந்தனையாளர். ஏழை எளியவர்கள் படும் துன்ப துயரங்களைக் கண்டு கண்ணீர் வடித்தவர். அதற்கு சாட்சி "நாசக்காரக் கும்பல்' என்ற கதை. இக்கதையில் சோஷலிசம், எதார்த்தவாதம், காந்தியம், சாதியம் அனைத்தும் ஒன்றாகச் சங்கமித்து நிலப்பிரபுத்துவத்தின் ஆணவத்தை அடக்க முஷ்டியை உயர்த்துகிறது. 1936-ஆம் ஆண்டு எழுதப்பட்டது இக்கதை. அக்காலகட்டத்தில் தமிழ் நாட்டில் ஜமீன்களும், நிலப்பிரபுத்துவமும் சரிந்துகொண்டிருந்த காலம். இந்த எதார்த்த நிலையை எழுச்சியுடன் எடுத்துக்காட்டியுள்ளார் புதுமைப்பித்தன்.

 ""வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க

 சொல்லேர் உழவர் பகை'' (குறள்-872)

 என்னும் குறளின் கருத்துக்கு ஏற்ப, புதுமைப்பித்தன் புரட்சிப் பித்தனாக மாறி சமூகத்தில் நடைபெறும் அக்கிரமங்களை, அநியாயங்களைக் கண்டு இலக்கிய நயத்துடன் எதார்த்தமாக எழுதிக்காட்டினார். 1933-இல் திருவனந்தபுரம் சுப்பிரமணியம் மகள் கமலாவை மணந்தார். இவர்களுக்கு தினகரி என்கிற ஒரே ஒரு பெண் வாரிசு. அந்த அம்மையார் இன்று நம்மிடையே வாழ்ந்து வருகிறார்.

 ÷புதுமைப்பித்தன் திரையுலகிலும் கால்பதித்தார். மூன்று ஆண்டுகள் வசனகர்த்தாவாக இருந்தார். எம்.கே.தியாகராஜ பாகவதர் தயாரித்த "ராஜமுக்தி' திரைப்படத்துக்கு வசனம் எழுதியவர் புதுமைப்பித்தன்தான். 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி காந்தியடிகள் சுடப்பட்டு, இந்திய மக்கள் சோகத்தில் இருந்த நேரத்தில் புதுமைப்பித்தன் பூனாவில் இருந்தார். அந்தச் சமயத்தில் அவரின் நோய் உச்சத்தில் இருந்தது. உடனே மனைவியின் ஊரான திருவனந்தபுரம் வந்து சேர்ந்தார். அங்கு சிதம்பரம் என்பவர் புதுமைப்பித்தனுக்கு உதவிகள் பல செய்தும் பலனில்லாமல் போனது. 1948-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி இயற்கை எய்தினார்.

 ÷2002-ஆம் ஆண்டு இவருடைய படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. அண்மையில் நடந்த தமிழ்ச் சிறுகதை கருத்தரங்கம் ஒன்றில், "தமிழ்ச் சிறுகதையின் தந்தை யார்?' என்கிற விவாதம் நடந்தது. ஆனால், முன்பே சொல்லிவிட்டார் தமிழறிஞரும் இலக்கியவாதியுமான டாக்டர் மு.வரதராசனார், "தமிழ்ச் சிறுகதையின் தந்தை புதுமைப்பித்தன்' என்று!

  தினமணி ’தமிழ்மணியில்’ வெளிவந்த பல்வேறு இலக்கிய ஆளுமைகளை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கில் என்னால் தொகுக்கப்படும் கட்டுரையாகும்.

முதல் கட்டுரையைப் படிக்க :  இலக்கிய ஆளுமைகள்-1